கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தமிழ்நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 24-ந் தேதி மாலையில் இருந்து டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டுவிட்டன. கோவையிலும் அப்படி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பின்னரும் ஆங்காங்கே மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பதாகச் சொல்லப்பட்டது.
ஆனாலும் மது பாட்டில்கள் எங்கேயும் கிடைக்கவில்லை என சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலையில் உள்ள குடிமகன்கள் புலம்பித் திரிந்தனர்.
இதனால் மது கிடைக்கவில்லை என விரக்தியில் இருந்த சில குடிமகன்கள் தங்கள் ஏரியாவில் உள்ள டாஸ்மாக் கடை எண் 1762 - கடைக்குள் புகுந்து மதுபானங்களைத் திருட திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி கடந்த 29-ந் தேதி இரவு மதுக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அந்த குடிமகன்கள் கும்பல் 500 மதுபான பாட்டில்களைத் தூக்கிக் கொண்டு ஓடி விட்டது.
இந்த நிலையில் அந்தக் கடையின் பூட்டு உடைக்கப் பட்டிருப்பதாக போலீசுக்கு தகவல் போக போலீஸ் அதிர்ச்சி அடைந்து பார்த்தனர். உடனே வழக்குப் பதிவு செய்து, கடையை உடைத்து மது பாட்டில்களை எடுத்த மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே டாஸ்மாக் அதிகாரி ஒருவர் பேசும்போது, கோவையின் வடக்கு பகுதியில் 161 டாஸ்மாக் கடைகளும், தெற்கு பகுதியில் உள்ள 137 கடைகளில் உள்ள மதுபாட்டில்கள் அனைத்தும் குடோன்களுக்கு மாற்றப்படும் எனத் தெரிவித்தார். திருட்டு சம்பவங்கள் நடக்குமோ என்கிற அச்சமும் இருப்பதாகவும் கூறினார்.