தமிழக சட்டப் பேரவையில், நீட் விலக்கு சட்டமுன்வடிவிற்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முன்மொழிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.06.2024) உரையாற்றினார். அந்த தீர்மானத்தில், “கிராமப்புற, ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக்கல்வி வாய்ப்புகளைக் கடுமையாகப் பாதிக்கும் வகையிலும், பள்ளிக் கல்வியை அவசியமற்றதாக்கும் வகையிலும், மாநில மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கும் வகையிலும் அமைந்துள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும்.
இந்தத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்து, பள்ளிக் கல்வியில் மாணவர்கள் பெறும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்காக, இந்தச் சட்டப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்டமுன்வடிவிற்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வேண்டுமென்றும், தொடர்ந்து பல முறைகேடுகளுக்கு வழிவகுத்து வரும் இந்தத் தேர்வு முறையை பல்வேறு மாநிலங்களும் தற்போது எதிர்த்து வரும் நிலையில், தேசிய அளவில் நீட் தேர்வு முறை கைவிடப்படும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் தேவைப்படும் திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழ்நாடு சட்டப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், “இந்தத் தீர்மானத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதனையடுத்து முதலமைச்சரின் தனி தீர்மானத்தின் மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்ப்பினர்கள் கலந்துக்கொண்டு பேசினர். அதனைத் தொடந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு மத்திய அரசு உடனடி ஒப்புதல் தர வேண்டும் என்ற தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.