
திமுக இளைஞரணிச் செயலாளரும், தமிழ்நாடு அரசின் சட்டமன்ற மதிப்பீட்டு குழு உறுப்பினரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக கர்ப்பிணி பெண்களுக்கான தடுப்பூசி முகாமை பெண்ணாடத்தில் தொடங்கிவைத்த அவர், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கரோனா சிகிச்சை மையத்தைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். பின்னர் திட்டக்குடி திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 50 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய 150 படுக்கைகள் வசதிகொண்ட கரோனா சிறப்பு மையத்தைத் தொடங்கிவைத்தார்.
பின்னர் வெலிங்டன் நீர்த்தேக்கத்தைப் பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட சிறப்பு வசதிகளைத் தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து கடலூர் கிழக்கு மாவட்டம் குறிஞ்சிப்பாடியில், டெல்டா விவசாயிகளுக்கான குறுவை சாகுபடி திட்ட துவக்க விழா குறிஞ்சிப்பாடி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ கலந்துகொண்டு, குறுவை சாகுபடி திட்ட தொகுப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த வேளாண் கண்காட்சியைப் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் உதயநிதி பேசுகையில், “கடலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் ஓட்டு கேட்டு உங்களை சந்தித்தேன். இப்போது எங்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த உங்களுக்கு நன்றி சொல்ல வந்துள்ளேன். வெற்றியைத் தந்த உங்களுக்கு 2 அமைச்சர்களைத் தந்துள்ளோம். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 2 மாதமாக சிறப்பாக ஆட்சி நடந்துவருகிறது. டெல்டா விவசாயிகளுக்காக, டெல்டா விவசாயிகளின் நலன் கருதி தமிழக முதல்வர் ஸ்டாலின் ரூ. 50 கோடியில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டத்தை அறிவித்துள்ளார். அத்திட்டத்தின்படி இந்த விழாவில் 154 பயனாளிகளுக்கு ரூ. 1,13,63,200 மதிப்பில் குறுவை சாகுபடி திட்டத் தொகுப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளோம். பொதுமக்கள் நிறைய மனுக்களை அளித்துள்ளீர்கள். தமிழக முதல்வர் மனுக்களைப் பரிசீலனை செய்ய தனித்துறையை அமைத்துள்ளார். விரைவில் அந்த மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்து தீர்வு காணப்படும். தேர்தலின்போது அவரிடம் கடலூர் மாவட்டத்தில் இருந்து 19,255 மனுக்கள் பெறப்பட்டது. அதில் 9 ஆயிரம் மனுக்களுக்கு மேல் தீர்வு காணப்பட்டுள்ளது. அதாவது குறுகிய காலத்தில் 50 சதவீத மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது” என்றார்.

அதனைத் தொடர்ந்து வடலூரில் தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாராணத் தொகுப்பை உதயநிதி வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வெ. கணேசன், மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம், கடலூர் வேளாண் இணை இயக்குநர் பாலசுப்ரமணியம், தமிழ்நாடு உதவி வேளாண் அலுவலர் சங்க மாநிலத் தலைவர் அருள், திமுக ஒன்றியச் செயலாளர்கள் சிவக்குமார், நாராயணசாமி, பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.