கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் வடகிழக்கு பருவமழையால் கடந்த சில நாட்களாகவே பலத்த கனமழை தொடர்ச்சியாகப் பெய்து வந்தது. இதனால் தேங்கிய மழைநீரால் சிதம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு, நாற்றங்கால் என நெற்பயிர்கள் 2 ஆயிரம் ஏக்கர்களுக்கும் மேல் தண்ணீரில் மூழ்கி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.
சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிக கனத்த மழை கடந்த இரண்டு நாட்களாகப் பெய்தது. இதனால் சிதம்பரம் அருகே உள்ள குமாரமங்கலம், வசபுதூர், நடராஜபுரம், கனகரபட்டு, சித்தலப்பாடி, தெற்கு பிச்சாவரம், வடக்கு பிச்சாவரம், கோவிலாம்பூண்டி, தில்லைவிடங்கன் மற்றும் கொள்ளிடக்கரை பகுதிகளில் உள்ள வேலக்குடி, அகரநல்லூர், வல்லம்படுகை, சிவபுரி, பெரம்பட்டு, திட்டுக்காட்டூர், அக்கரை ஜெயங்கொண்டபட்டினம், கீழக்குண்டலப்பாடி உட்பட பரங்கிப்பேட்டை, குமராட்சி, காட்டுமன்னார்கோவில், புவனகிரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் நடவு, நேரடி நெல் விதைப்பு, நாற்றங்கால் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களான பருத்தி, மரவள்ளி, வாழை, வெண்டைக்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட பயிர் வகைகளும் 2 ஆயிரம் ஏக்கர்களுக்கும் மேல் மழைநீரால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை இரவு வரை பெய்த தொடர் மழையால் வீராணம் ஏரியின் முழுக்கொள்ளளவை எட்டி அதன் உபரிநீர் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வெள்ளியங்கால் ஓடை வழியாகத் திறக்கப்பட்டுள்ளதால் தற்போது விளைநிலங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கி வருகிறது. ஏற்கனவே மழைநீரால் மூழ்கியிருந்த நெற்பயிர்கள் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களில் தற்போது கூடுதலாக வீராணம் ஏரியின் தண்ணீரும் தேங்குவதால் விவசாயிகள் பெரும் சோகத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் சிதம்பரம், பரங்கிப்பேட்டை, குமராட்சி உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனையறிந்த வேளாண்துறை அலுவலர்கள் மாவட்ட இணை இயக்குநர் ரவிச்சந்திரன், உதவி இயக்குநர் நந்தினி உள்ளிட்டவர்கள் சம்பந்தப்பட்ட விளைநிலங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களிலும், மழை இல்லாத நேரங்களில் கூட காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையாலும் இந்தப் பகுதி பாதிப்படைகிறது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.