மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக ஆயுள் கைதியாக சென்னை மத்திய சிறையில் உள்ள பேரறிவாளன், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 90 நாட்கள் விடுப்பு வழங்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ நடராஜன் ஆஜராகி, 2019-ல் பேரறிவாளன் விடுப்பில் சென்று வந்துள்ளதால், மீண்டும் தற்போது விடுப்பு கேட்கும் மனுவை நிராகரித்துவிட்டதாக தமிழக அரசும், சிறைத்துறையும் தெரிவித்தது. மேலும், ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய தீர்மானித்திருந்தாலும், ராஜீவ்காந்தி கொலையில் சர்வதேச தொடர்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பன்னோக்கு விசாரணை முகமையின் இறுதி அறிக்கை வரப்பெறாததால், விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதாக அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அற்புதம்மாள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், பேரறிவாளனின் தாய் தந்தை இருவரும் வயதானோர் என்பதாலும், அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகவும் வலியுறுத்தினார்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்கி உத்தரவிட்டனர். உத்தரவு கிடைத்த ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, 30 நாட்கள் விடுப்பு அளிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். அவர் விடுப்பில் இருக்கும் காலங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளுக்காக சிறைத்துறை விதிக்கும் நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என பேரறிவாளனுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
இதன்பின்னர், பன்னோக்கு விசாரணை முகமையின் அறிக்கைக்காக ஆளுநர் காத்திருக்கிறார் என்று, தமிழக அரசு தாக்கல் செய்த ஆவணத்தை தங்களுக்குத் தர வேண்டுமென, அற்புதம்மாள் தாக்கல் செய்த கூடுதல் மனு மீதான விசாரணையை அக்டோபர் 1-ஆம் தேதி நீதிபதிகள் விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.