கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில், இன்று (12ம் தேதி) காலை சாலை தடுப்பில் மோதி கார் ஒன்று தீப்பிடித்து பயங்கரமாக எரிந்தது. இதில், காரில் இருந்த நால்வர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நிக்கில், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்துவருகிறார். இவர், தனது இரு மகள்கள் மற்றும் மனைவியுடன் காரில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.
இந்நிலையில், உளுந்தூர்பேட்டை, எ.சாத்தனூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை மீறி சாலை நடுவே இருக்கும் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் பலத்த சேதம் அடைந்து காருக்குள்ளேயே நால்வரும் சிக்கிக்கொண்டனர். அதேசமயம், கார் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. உடனடியாக அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் காருக்குள் சிக்கியிருந்த நால்வரையும் மீட்டனர். மீட்கப்பட்ட நால்வரையும் ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்த விபத்தின் காரணமாக திருச்சி - சென்னை மார்க்கமாகச் செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.