ஆளுநரின் ஆய்வுக்கு கண்டனம் தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
ஆளுநரின் ஆய்வுக்கு கண்டனம் தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாநில சுயாட்சி கொள்கைக்கு விரோதமாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களை துஷ் பிரயோகப்படுத்தும் விதமாகவும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வு நடத்தியதை, ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டித்து, “கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான இதுபோன்ற செயல்பாடுகளில் ஆளுநர் அவர்கள் ஈடுபடக்கூடாது” என்று தெரிவித்திருந்தார்.
மீண்டும் பல்வேறு மாவட்டங்களில் ஆளுநர் ஆய்வு மேற்கொண்ட போது, “ஆய்வு இனிமேலும் மற்ற மாவட்டங்களில் தொடருமானால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அறவழிப் போராட்டம் நடத்தப்படும்”, என்று கடந்த 7.12.2017 அன்று வெளியிட்ட அறிக்கையில் மு.க.ஸ்டாலின் எச்சரித்து இருந்தார்.
ஆனால், கடலூர் மாவட்டத்தில் நாளை (15.12.2017) ஆளுநர் ஆய்வு மேற்கொள்வார் என்று மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டாலின் ஏற்கனவே கட்டளையிட்டவாறு, ஆளுநர் ஆய்வுக்கு கண்டனம் தெரிவித்து கடலூர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 15.12.2017 அன்று கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்ட கழக நிர்வாகிகளும், கழக தொண்டர்களும் மாநில சுயாட்சி கொள்கையை நிலைநாட்டிடவும், ஆளுநர் அவர்களின் அத்துமீறிய அதிகார வேட்கைக்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலும், அறவழியிலான கறுப்புக்கொடி ஆர்பாட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.