புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா பொறுப்பேற்று சில வாரங்களே ஆன நிலையில் பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்பினர் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டுள்ளது. அந்த சிலையை உடனே மீண்டும் வைக்க வேண்டும் என்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை முதல் பா.ஜ.கவினர் சமூக வலைதளங்களில் பதிவுகளை பகிர்ந்துள்ளனர். இந்த நிலையில் இன்று சனிக்கிழமை காலை பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்பினர் பலர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் முன்பு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலிசார் குவிக்கப்பட்டு பாஜகவினரை தடுத்து நிறுத்தினார்கள். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா பாஜகவினரை சந்தித்தார். அப்போது, முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை அங்கேயே உள்ளது. அகற்றப்பட்டதாகவும் சிதைக்கப்பட்டதாகவும் வதந்தி பரவுகிறது என்று கூறியுள்ளார்.
வெளியே வந்த பாஜகவினரோ.., ‘முகாம் அலுவலக வளாகத்தில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டுள்ளது. பாஜகவினர் பிரச்சனையை கிளப்பியதும் அவசர அவசரமாக தோட்டத்தில் புதிய பீடம் அமைத்து விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள் வைக்கப்பட வேண்டிய மர பீடத்துடன் வெளியில் வைக்கப்பட்டுள்ளதால் மழை, வெயிலுக்கு அந்த மர பீடம் சிதிலமடையும்’ என்றனர்.
இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்படும்போது உடைந்துவிட்டதாக தவறான தகவல் வாட்ஸாப் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. வாட்ஸாப்பில் வந்த செய்தியில் உண்மை இல்லை. சிலை தொன்மையானதன்று. உடையாமல் நல்ல நிலையில் உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி மதச்சார்பற்று நடந்து வரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது மத சாயம் பூச முயற்சிக்கும் செயலாகும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவும், சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் உள்ளவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி பொதுமக்கள் சந்தேகம் கொள்ள ஏதுவாக இச்செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இச்செய்தியை பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறப்பட்டுள்ளதுடன் விநாயகர் சிலை தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள படத்தையும் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் பாஜகவினர் வெளியிட்டுள்ள வீட்டிற்குள் உள்ள விநாயகர் சிலை படத்தை யார் வெளியில் அனுப்பியது என்பது பற்றியும் சைபர் கிரைம் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.