சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் சுரேஷ். தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த 2015- ஆம் ஆண்டு, அம்பத்தூரில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வரும் தொழிலாளர்களுக்கு வங்கி கணக்கு தொடங்குவதற்காக, தொழிலாளர்களின் முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களைப் பெறுவதற்காக அங்கு சென்றார்.
அப்போது, அங்கு வேலை பார்த்து வந்த ஒரு பெண்ணின் செல்போனில் தொடர்பு கொண்டு, அந்தப் பெண்ணை விரும்புவதாகவும், தன்னுடன் பேசாவிட்டால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறி உள்ளார். இதனால், வேறு வழியில்லாமல் அந்த பெண், சுரேஷுடன் பேசி உள்ளார். இதை பயன்படுத்தி கொண்ட சுரேஷ், அந்த பெண்ணை மிரட்டி வீட்டுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
இதன்பின்பு, உல்லாசமாக இருந்த படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாகவும், உறவினர்களிடம் காண்பித்து விடுவதாகவும் மிரட்டி அவ்வப்போது உல்லாசமாக இருந்துள்ளார். அடிக்கடி செல்போனில் பேசி தொந்தரவு கொடுத்ததால், செல்போன் எண்ணை அந்த பெண் மாற்றி விட்டார். இருந்தபோதிலும், அந்த பெண்ணை மிரட்டி, புதிய செல்போன் எண்ணைப் பெற்று, உல்லாசத்துக்கு அழைத்து மிரட்டியதால், அந்த பெண் தற்கொலைக்கு முயன்றார்.
இந்த நிலையில், அந்த பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதன்பின்பு, கர்ப்பத்தைக் கலைத்து விட்டு, சுரேஷ் மீது வேப்பேரி மகளிர் போலீசில் அந்த பெண் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து, சுரேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு, மகளிர் கோர்ட்டில் நீதிபதி ராஜலட்சுமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சுரேஷ் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.