தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் (03.07.2021) இரவு குழந்தை பிறந்த நிலையில் குழந்தை இறந்ததாக கூறி பெற்றோரிடம் மருத்துவமனை நிர்வாகம் கொடுத்திருக்கிறது. இந்தக் குழந்தைக்கு இறுதிச்சடங்கு நடத்துவதற்காக மயானத்திற்கு கொண்டு செல்லும்போது குழந்தை உயிருடன் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது மருத்துவமனையின் மிகப்பெரிய அலட்சியப்போக்கு என்ற எதிர்ப்புக் குரலும் எழுந்தது.
தேனி மாவட்டம் பெரியகுளம், தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த பிளவேல்ராஜா - ஆரோக்யமேரி தம்பதியினருக்கு மூன்றாவதாக குழந்தை பிறந்திருக்கிறது. ஆறுமாத குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் குழந்தை இறந்ததாக கூறி மருத்துவமனை நிர்வாகம் இறப்புச் சான்றிதழுடன் குழந்தையின் உடலையும் பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளது. சான்றிதழுடன் குழந்தையை மயானத்திற்கு தூக்கிச் சென்றபோது குழந்தைக்கு இதயத்துடிப்பு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் குழந்தையை வாளியில் போட்டு கொடுத்ததாக மருத்துவமனை நிர்வாகத்தின்மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பலமணி நேரமாக மூடப்பட்டிருந்த வாளியில் அடைக்கப்பட்ட அந்தக் குழந்தைக்கு இதயத்துடிப்பு இருந்தது பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு செயற்கை சுவாசம் கொடுத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.