கவிஞர் மு.முருகேஷ் எழுதிய சிறுவர் இலக்கிய நூலுக்கு விருது!
புதுக்கோட்டையில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் சிறந்த இலக்கிய நூல்களுக்கான புத்தகத் திருவிழா விருதுகள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை நகர்மன்றத்தில் அரங்கில் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற விழாவில், கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘ஒல்லி மல்லி குண்டு கில்லி’ எனும் நூல், 2016-ஆம் ஆண்டில் வெளியான சிறந்த குழந்தை இலக்கிய நூலாகத் தேர்வு செய்யப்பட்டு, ’சிறந்த குழந்தை இலக்கிய நூலுக்கான விருது
ரூ.5,000/- பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.
இவ்விருது வழங்கும் விழாவிற்கு மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநர் பேரா. ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன் தலைமை வகித்தார். புதுக்கோட்டை சார் ஆட்சியர் செல்வி கே.எம். சராயு, இ.ஆ.ப. அவர்கள் விருதினையும் பரிசுத் தொகையினையும் வழங்கிச் சிறப்பித்தார்.
விழாவில், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா, கவிஞர்கள் மனுஷி, தங்கம்மூர்த்தி ஆகியோர்
கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட புத்தகத் திருவிழாவில் ’சிறந்த குழந்தை இலக்கிய நூலுக்கான.விருது’
பெற்ற கவிஞர் மு.முருகேஷ், வந்தவாசி நூலக வாசகர் வட்டத்தின் தலைவராகவும், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் ஆலோசகராகவும் இருந்து சமூகம், கல்வி மற்றும் இலக்கியப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதுவரை 37-க்கும் மேற்பட்ட கதை, கவிதை ,கட்டுரை, சிறுவர் இலக்கியம், விமர்சன நூல்களை எழுதியுள்ளார்.
இவரது படைப்புகள் மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இலக்கிய மாநாடுகளில் உரையாற்றுவதற்காக இலங்கை, சிங்கப்பூர், குவைத் ஆகிய நாடுகளிலுள்ள அமைப்புகளின் அழைப்பின் பேரில் சென்று, உரையாற்றி வந்துள்ளார். கடந்த மாதம் சாகித்திய அகாடெமி, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடத்திய தேசிய அளவிலான குழந்தை இலக்கிய கருத்தரங்கிலும் பங்கேற்றுள்ளார்.
இவரது படைப்புகளை இதுவரை 5 கல்லூரி மாணவர்கள் இளமுனைவர் பட்ட ஆய்வும், 2 மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வும் செய்துள்ளனர். இவரது கவிதைகள் மதுரை காமராஜர் பல்கலைக் கழக பாடத்திட்டத்திலும், விருதுநகர் வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரிப் பாடத்திட்டத்திலும், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள்ளன.
சிறுவர்களுக்கான 9 கதை நூல்களையும், 5 தொகுப்பு நூல்களையும் எழுதியுள்ள இவர், சமச்சீர் பாடத்திட்டக் குழுவில் இடம்பெற்று, 1-ஆம் வகுப்பு மற்றும் 6-ஆம் வகுப்பு பாட நூல்கள் உருவாக்கத்தில் பங்களிப்பு செய்துள்ளார். 2010- ஆம் ஆண்டு வெளியான இவரது ‘குழந்தைகள் சிறுகதைகள்’ எனும் நூல், தமிழக அரசின் ’புத்தகப் பூங்கொத்து’எனும் திட்டத்தில் தேர்வாகி, தமிழகத்திலுள்ள 32 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-இரா. பகத்சிங்