ஜெ.மரணம் தொடர்பான விசாரணையை தொடர்ந்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மேற்கொண்டுவருகிறது. மருத்துவர்களை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை கோரி அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி மனு அளித்திருந்தது. அந்த மனுவில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க அரசு சாராத மருத்துவர்களை கொண்ட குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. வழக்கில் தீர்வு காணும் வரை மருத்துவ விஷயங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
கடந்த மாதம் 11 ஆம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுத்தது. தொடர்ந்து நடந்துவரும் இந்த வழக்கில் இன்று, அப்போலோ மருத்துவர்களை ஆறுமுகசாமி ஆணையம் தொடர்ந்து மிரட்டி வருவதாக அப்போலோ தரப்பு வாதாடியது. மருத்துவர் ஆஜராகாவிடில் மருத்துவமனை சார்ந்தவர்கள் ஆஜராக உத்தரவிடுவோம் என ஆணையம் மிரட்டுவதாகவும் புகார் கூறியுள்ளது.