கிராம புறமான ஊராட்சிகளில் தூய்மைக் காவலர்களுக்கு அரசு அறிவித்த ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டுமென ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் போராட்ட விளக்க கூட்டங்கள் ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.
தமிழகத்தில் 12,524 சிற்றூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 66,025 தூய்மைக் காவலர்கள் பணியாற்றி வருகிறார்கள். 2014 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், இவர்களுக்கு தினக்கூலியாக ரூபாய் 167 ஆக முதலில் நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து இக்கூலி வகை 2017ல் ரூபாய் 205 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் ஒரு காரணமும் இல்லாமல் திடீரென 2018 முதல் இவர்களுக்கான தினக்கூலி ரூபாய் 100 ஆக குறைத்து அந்தக் கூலி தொகை கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
ஊரை சுத்தம் செய்யும் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கான தின கூலியை திடீரென குறைத்தது சட்ட விரோதமானது என்றும் ஊதிய உயர்வு கோரியும் கம்யூனிஸ்ட் கட்சியின் சங்கமான ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பல கட்ட போராட்டங்களை நடத்தின. இதன் விளைவாக கடந்த மார்ச் 16ஆம் தேதி சட்டசபைக் கூட்ட தொடரில் உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கையின்போது தூய்மைக் காவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை 2020 ஏப்ரல் மாதம் முதல் மாதம் ரூபாய் 2,600லிருந்து ரூபாய். 3,600 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் ஏழு மாதங்களாகியும் இதற்கான அரசாணை இன்றுவரை வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் உயர்த்தப்பட்ட ஊதிய உயர்வினை உடனே வழங்கிடக் கோரியும், கரோனா கால பணிக்கு சிறப்பு ஊதியமாக இரட்டிப்பு ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்றும் ஈரோடு மாவட்ட உள்ளாட்சித் துறை பணியாளர் சங்கம் வருகின்ற அக்டோபர் 28 அன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்துவதாக அறிவித்துள்ளது.
இந்த காத்திருப்பு போராட்டம் திருப்பூர் தொகுதி கம்யூனிஸ்ட் எம்.பி. திருப்பூர் சுப்பராயன், முன்னாள் எம்.எல்.ஏ. நா.பெரியசாமி ஏ.ஐ.டி.யு.சி.மாநில செயலாளர் சின்னுச்சாமி ஆகியோர் தலைமையில் நடக்கிறது. இந்தப் போராட்டத்தை விளக்கி ஈரோடு, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம்,சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகங்கள் முன்பு போராட்ட விளக்க கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
கரோனா காலத்தில் பல துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் சம்பளம் பெற்று வீட்டில் பாதுகாப்பாக இருந்தபோது. கரோனா வைரஸ் பரவல் பகுதிகளிலும் உயிரைப் பற்றியும் நோயை பற்றியும் கவலை இல்லாமல் வீதிகளை, சுற்றுப்புறத்தை, கிராமத்தை எல்லாம் சுத்தம் செய்த இந்த தூய்மை பணியாளர்கள் 66 ஆயிரம் பேருக்கு கொடுப்பதாக கூறிய கூலியை கொடுக்கவில்லை என அச்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். மேலும் கரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு தமிழக அரசு ரூ.15 ஆயிரம் கோடி செலவு செய்ததாக அரசு கணக்கு வெளியிடுகிறது. ஆனால் இவர்களுக்கு இன்னும் ஊதியம் வரவில்லை என்றும் அச்சங்கத்தினர் தெரிவித்தனர்.