அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன், சசிகலா எனப் பல தரப்புகளும் பிரிந்து கிடக்கும் நிலையில் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பும், அதேபோல் சசிகலா தரப்பும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.
அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியாக இரண்டாவது முறையாக 'அம்மா வழியில் மக்கள் பயணம்' என்ற பெயரில் மீண்டும் சுற்றுப் பயணத்தை நேற்று சசிகலா தொடங்கியுள்ளார். தென்காசி அடுத்த காசிமேசபுரத்தில் இருந்து சசிகலா தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கி பொதுமக்களிடம் திறந்த வெளி வாகனத்தில் பேசி இருந்தார்.
சசிகலாவின் சுற்றுப்பயணத்தை முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், 'கறந்த பால் மடி புகாது; மீன் கருவாடு ஆகலாம். ஆனால் கருவாடு மீன் ஆகாது. இப்போது இருக்கின்ற நிலைமை 'கறந்த பால் மடி புகாது; கருவாடு மீன் ஆகாது என்ற நிலைமை தான் உள்ளது. இந்த மாதம் அனைத்திந்திய அதிமுகவின் தொண்டர்கள் மிகவும் கவனமாகவும், விழிப்புணர்வுடன் எச்சரிக்கையோடும் இருக்க வேண்டிய தருணம் இது'' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக கட்சி இணைவது உறுதி ஆகிவிடும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''கட்சியை இணைப்பதற்கான அடிப்படை வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் அதிமுக ஒன்றிணையும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக ஒன்றிணைந்து விடும்'' என தெரிவித்துள்ளார்.