Skip to main content

'இந்த மாதம் அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்'-ஆர்.பி.உதயகுமார் பேட்டி

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
 'AIADMK volunteers should be cautious this month'-RB Udayakumar

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன், சசிகலா எனப் பல தரப்புகளும் பிரிந்து கிடக்கும் நிலையில் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பும், அதேபோல் சசிகலா தரப்பும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.

இந்நிலையில் அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியாக இரண்டாவது முறையாக 'அம்மா வழியில் மக்கள் பயணம்' என்ற பெயரில் மீண்டும் சுற்றுப் பயணத்தை நேற்று சசிகலா தொடங்கியுள்ளார். தென்காசி அடுத்த காசிமேசபுரத்தில் இருந்து சசிகலா தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கி பொதுமக்களிடம் திறந்த வெளி வாகனத்தில் பேசி இருந்தார்.

இந்நிலையில் சசிகலாவின் சுற்றுப்பயணத்தை முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், 'கறந்த பால் மடி புகாது; மீன் கருவாடு ஆகலாம். ஆனால் கருவாடு மீன் ஆகாது. இப்போது இருக்கின்ற நிலைமை 'கறந்த பால் மடி புகாது; கருவாடு மீன் ஆகாது என்ற நிலைமை தான் உள்ளது. இந்த மாதம் அனைத்திந்திய அதிமுகவின் தொண்டர்கள் மிகவும் கவனமாகவும், விழிப்புணர்வுடன் எச்சரிக்கையோடும் இருக்க வேண்டிய தருணம் இது.

இந்திய தேசத்திற்கு மகாத்மா காந்தி சுதந்திரம் வாங்கி கொடுத்து 75 ஆண்டுகள் சுதந்திர காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து போராடி பெற்று கொடுத்த சுதந்திர காற்றை சுவாசித்து வருகிறோம். 17/10/1972-இல் எம்ஜிஆர் சாதாரண மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அதிமுக இயக்கத்தை தொடங்கினார். தொடங்கிய காலத்தில் இருந்து அவர் கோட்டையில் முதலமைச்சராக தான் ஆயுள் முழுவதும் இருந்தார். அப்படிப்பட்ட மகத்தான மக்கள் இயக்கம் அதிமுக. இந்த இயக்கத்தில் எடப்பாடி பழனிசாமி ஒரு சாமானியனாக கிளை செயலாளராக தன்னுடைய பொதுவாழ்க்கையைத் தொடர்ந்து ஐம்பது ஆண்டு அயராத உழைப்பால், விசுவாசத்தால் ஜெயலலிதாவின் ஆன்மாவின் ஆசியோடு, எம்ஜிஆரின் ஆன்மாவின் ஆசியோடு, தொண்டர்களின் ஆதரவோடு நான்கரை ஆண்டுகள் எவராலும் சாமானியமாக நடத்த முடியாது என்று சொல்லுகின்ற அரசை ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு நடத்திக் காட்டினார்'' என்றார்.

சார்ந்த செய்திகள்