காட்டுமன்னார்குடி அருகே லால்பேட்டை பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வீராணம் ஏரிக்கு கல்லணை மற்றும் கீழணையில் இருந்து கடலூர் மாவட்ட தண்ணீர் பங்கினை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், புவனகிரி, சிதம்பரம், கீரப்பாளையம், குமராட்சி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட டெல்டா கடைமடை பகுதி வரை பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும், 2023-24 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு செய்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சம் இன்றி இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் ஜாகீர் உசேன் தலைமை தாங்கினார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எஸ்ஜி. ரமேஷ்பாபு, விதொச மாவட்ட செயலாளர் பிரகாஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், விவசாயத் தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் வாஞ்சிநாதன், மாவட்ட துணை செயலாளர் மணி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் ஆதிமூலம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு ஆர்பாட்டத்தின் நோக்கங்கள் குறித்து பேசினார்கள்.
இதில் விவசாயத் தொழிலாளர் சங்க வட்ட செயலாளர் வெற்றி வீரன், வட்ட தலைவர் பொன்னம்பலம், குமராட்சி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் புஷ்பராஜ் உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள் பாலமுருகன், முனுசாமி, அப்துல் வதுது, சுப்பிரமணியன், குமார், சாகுல் ஹமீது, மணிகண்டன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பாசனத்திற்கு தண்ணீர் கேட்டும், பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.