இந்திய அளவில் தலைநகர் டெல்லியில் வருகிற 19 ந் தேதி விவசாயிகளின் தேசிய அமைப்பான பாரத் கிசான் யூனியன் சார்பில், நாடு தழுவிய அளவில் விவசாய பிரச்னைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இதற்காக, ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள விவசாய சங்கங்கள், அரசின் திட்டங்களால் பாதிக்கப்படும் விவசாய அமைப்புகள் மற்றும் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் உயர் மின் கோபுரம் அமைத்தல், பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் ஐ.டி.பி.எல் திட்டம் போன்றவற்றால் பாதிக்கப்படும் விவசாயிகளின் கூட்டமைப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இதுபற்றி ஐ.டி.பி.எல். பாதிப்பு விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் டவர் லைன் பாதிப்பு விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் பொன்னையன், வக்கீல் ஈசன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். அப்போது, பொன்னையன், "உயர்மின் கோபுரம், ஐ.டி.பி.எல் திட்டங்களை முழு அளவில் விவசாய நிலங்கள் வழியாக செயல்படுத்துவதால், விளை நிலங்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். மாற்று வழியாக, தேசிய நெடுஞ்சாலை அல்லது ரயில்வே லைன் அருகே கொண்டு செல்ல வேண்டும் என கோரினோம். இதுபற்றி, பிரதமர் உள்ளிட்ட அனைத்து நிலை அரசு நிர்வாகத்துக்கும் மனு வழங்கினோம். ஆனால் எந்த பயனும் இல்லை. பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
இந்த நிலையில் பாரத் கிசான் யூனியன் தேசிய தலைவர் ராகேஷ் திகாயத், ஒருங்கிணைப்பாளர் யுத்வீர் சிங் ஆகியோர் முன்னிலையில், டெல்லியில் வரும் 18ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதில், தமிழகத்தின் சார்பில் ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி பங்கேற்கிறார். அவருடன் எங்கள் கூட்டமைப்பு சார்பில் வக்கீல் ஈசன், பொன்னையன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் நேரில் சென்று பங்கேற்கிறோம். ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மனு வழங்க உள்ளோம். அதுதவிர, இப்பிரச்னை தொடர்பாக, அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகளை சந்தித்து விரிவாக பேசி உள்ளோம்" என தெரிவித்தார்.