தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்துச் செய்யப்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மாநில கல்வித் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மட்டுமே உயர்கல்வி வாய்ப்புகளுக்கான தகுதியாக கருதப்பட வேண்டும் என்ற கொள்கை நிலைப்பாட்டில் இந்த அரசு உறுதியாக இருப்பினும், தேர்வுகளை மேலும் தள்ளி வைப்பது, மாணவர்களை மனதளவில் பாதிப்பிற்கு உள்ளாக்கும் என்று மருத்துவர்கள் கருதுவதால், அவர்களது அறிவுரை மற்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் வரப்பெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு இந்த ஆண்டு ரத்துச் செய்யப்படுகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதனை முடிவு செய்ய, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் உயர்கல்வித்துறைச் செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர், பள்ளித்தலைமை ஆசிரியர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும்.
இக்குழு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆய்வு செய்து, விரைவில் அரசுக்கு அறிக்கைச் சமர்ப்பிக்கும். இக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு இறுதித் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்களைக் கொண்டு மட்டுமே, தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை நடைபெறும்.
கரோனா பெருந்தொற்று காலத்தில், மாணவர்களின் உடல் நலன் மற்றும் மனநலனைக் கருத்தில் கொண்டு மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டாலும், மாநில கல்வித் திட்ட அடிப்படையில், உயர்கல்விச் சேர்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதிச் செய்யும்." இவ்வாறு முதல்வர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.