![](http://image.nakkheeran.in/cdn/farfuture/2YAom_ZaI8ZU0W8fQ8hhMMN9AzXRKcgKFsG-F3Ah_EE/1533347616/sites/default/files/inline-images/18%20mlas_0.jpg)
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக எஸ்.விமலா நியமிக்கப்பட்டு உள்ளார்.
முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கக் கோரி கடந்த ஆண்டு, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் வழங்கினர். ஆட்சிக்கும் கட்சிக்கும் எதிராக நடந்து கொண்டதால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயருக்கு பரிந்துரை செய்தார். அவர்களில் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையன் சபாநாயகரிடம் விளக்கம் அளித்த நிலையில், மற்ற 18 எம்எல்ஏக்களை 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முதலில் தனி நீதிபதி விசாரித்து வந்த இந்த வழக்கு பின்னர் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. கடந்த ஜனவரி 24ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து,18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி அன்று பிற்பகல் 1 மணி அளவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு தீர்ப்பு வழங்கியது.. அதில், சபாநாயகரின் உத்தரவு செல்லும் என நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார். ஆனால் நீதிபதி எம்.சுந்தர் சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தெரிவித்தார்.
இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பையடுத்து, 3வது நீதிபதிக்கு வழக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 3வது நீதிபதி தீர்ப்பு வழங்கும் வரை 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் தொடரும். தகுதிநீக்க வழக்கின் முடிவு வரும் வரை இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்ற இடைக்கால உத்தரவு நீடிக்கும் என்றும் 3வது நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக இந்த வழக்கை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேசுக்கு, தலைமை நீதிபதியும், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரும் அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து 3-வது நீதிபதியாக யாரை நியமிப்பது என்று மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் பரிசீலித்தார். பின்னர், உயர்நீதிமன்றத்தில், மூத்த நீதிபதியாக இருக்கும் நீதிபதி எஸ்.விமலாவை நியமிக்க முடிவு செய்தார். இதுதொடர்பான நிர்வாக உத்தரவை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் பிறப்பித்துள்ளார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.