எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூட்டிய பொதுக்குழுவைச் செல்லாது என அறிவிக்கக் கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், அ.தி.மு.க.வில் ஜூன் 23- ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த மேல்முறையீடு வழக்கில் விசாரணைகள் நடைபெற்று முடிந்த நிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்ராமன் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில், 'கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு செல்லும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து எடப்பாடி தரப்பும் ஓபிஎஸ் தரப்பும் மாறி மாறி தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட பிரச்சனை என்னவென்றால் அடிமட்ட தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதுதான். கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் கருத்துக்கள் அடிமட்ட தொண்டர்களிடம் திணிக்கப்படுகிறது. ஆனால் அடிப்படை அதிமுக தொண்டர்கள் என்ன எண்ணுகிறார்கள். எது சரி என்று நினைக்கிறார்கள் என்ற கருத்து பொதுவெளிக்கு வருவதில்லை.
நான் துவங்க இருக்கிற சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதன் நோக்கம் அடிப்படை தொண்டர்களின் கருத்து என்ன என்பதை தெரிந்து கொள்வதுதான். எம்.ஜி.ஆர் பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள், முக்கியஸ்தர்களின் கருத்துக்களை கேட்டு முடிவு எடுக்கமாட்டார். ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ்-ஐ இபிஎஸ் வீழ்த்தினாரா, ஓபிஎஸ் சசிகலாவை வீழ்த்தினாரா, ஓபிஎஸ்-ஐயும், இபிஎஸ்-ஐயும் டிடிவி.தினகரன் வீழ்த்தினாரா என்கிற அளவில் அதிமுகவில் யுத்தம் திசைமாறிப் போய்விட்டது. ஒரு அரசியல் கட்சியின் நோக்கம் ஆளுங்கட்சியாக, தேர்தலில் வெல்லும் கட்சியாக இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால் 2016 டிசம்பர் ஜெயலலிதா மறைந்து 6 ஆண்டுகள் ஆன பின்னரும் அதிமுகவில் அதிகாரம் குறித்த போட்டிதான் நிலவி வருகிறது'' என்றார்.