அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அக்கட்சிக்கு பரிசுப்பெட்டி சின்னமாக கிடைத்ததையடுத்து அவர்களது கட்சியினர் சின்னத்தை கொண்டு போய் சேர்ப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் வீரபாண்டி எஸ்.கே.செல்வத்தை ஆதரித்து டி.டி.வி.தினகரன் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தார்.
அப்போது, சேலத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருகை வந்தால் 500 முதல் 1000 போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். ஏனென்றால் மக்களை சந்திக்க அவருக்கு பயம் இருக்கிறது. விவசாயி என்று கூறும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளை பற்றி கவலைப்படாமல் விளை நிலங்களை அழித்து ஏன்? 8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்த துடிக்கிறார்.
ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்டக்கூடாது, சட்டசபையில் அவரது உருவப்படம் திறக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்திற்கு சென்ற பா.ம.க.வுடன் தற்போது கூட்டணி வைத்துள்ளனர். துரோகிகளுக்கு இந்த தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடியா? லேடியா? என்று ஜெயலலிதா கேட்டார். ஆனால் இப்போது மோடியை டாடி என்று சில அமைச்சர்கள் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. பதவிக்காக அவர்கள் எதை வேண்டுமானலும் செய்வார்கள்.
நாடாளுமன்ற தேர்தலிலும், 18 தொகுதி இடைத்தேர்தலிலும் நாம் வெற்றி பெறுவது உறுதி. நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சைகள் வெற்றி பெற்று ஒரு பிரதமரை தேர்ந்தெடுக்க கூடிய சூழ்நிலை உருவாகும்.
இந்த நாடாளுமன்ற தேர்தலோடு எடப்பாடி பழனிசாமி ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். பிரதமர் மோடி அல்ல, எடப்பாடி பழனிசாமியின் டாடியே வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.