தி.மு.க. வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலிலிருந்து திட்டமிட்டு நீக்கிட ஆளும் அ.தி.மு.க. முயற்சி செய்வதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் நேரில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஈடுபடும் பாக நிலை அலுவலகர்களிடம் (BLO) அ.தி.மு.க.வைச் சேர்ந்த பாகநிலை முகவர்கள் (BLA-2), தி.மு.க.விற்கு தொடர்ந்து வாக்களித்து வரும் வாக்காளர்களின் வரிசை எண்ணை, வாக்காளர் பட்டியலில் வட்டமிட்டு குறிப்பிட்டு, அவர்களின் பெயரை நீக்கம் செய்திட திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆதாரத்துடன் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,எம்.பி., அவர்கள் மற்றும் தலைமைக் கழக வழக்கறிஞர் இரா.நீலகண்டன் ஆகியோர் இன்று (7.11.2020) காலை, சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகுவை நேரில் சந்தித்து புகார் அளித்தனர். தலைமை தேர்தல் அலுவலர் இப்புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.