Skip to main content

நானே தலைமையேற்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவேன்... ராமதாஸ் அறிவிப்பு 

Published on 31/05/2020 | Edited on 31/05/2020
ramadoss



 

சிதம்பரம் அருகே சாயக்கழிவு ஆலை பணிகளை கைவிட வேண்டும், கட்டுமானப் பணிகள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால், கரோனா ஊரடங்கு முழுமையாக நீக்கப் பட்ட பிறகு அப்பகுதி மக்களை திரட்டி நானே தலைமையேற்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவேன் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் ஓர் அங்கமான கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் அருகே சாயக்கழிவு ஆலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளன. கடலூர் மாவட்டத்தின் வளமான பகுதிகளை பாலைவனமாக்கக் கூடிய இந்தத் திட்டத்தை உள்ளூர் மக்களின் எதிர்ப்பையும் மீறி மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தத் துடிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
 

கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையை அடுத்த பெரியப்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில்  304 ஏக்கர் பரப்பளளவில் ஜவுளி பூங்கா என்ற பெயரில் கடந்த 2004&ஆம் ஆண்டு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதன் உண்மையான நோக்கம் கோவை, திருப்பூர் மாவட்டங்களிலுள்ள சாயப் பட்டறைகளில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை கொண்டு வந்து, தண்ணீரைக் கலந்து கடலில் விடுவது தான். இத்திட்டத்தின் உண்மையான பின்னணியை தெரிந்து கொண்டதால் தான் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இத்திட்டத்திற்கு எதிராக அப்பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்; அவர்களுக்கு ஆதரவாக பா.ம.க.வும் போராடி வருகிறது.
 

மக்களின் எதிர்ப்புக்கு பணிந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த ஆலையின் கட்டுமானப் பணிகளை,  ஆலையை நிறுவும் அமைப்பான சைமா எனப்படும் தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம், இப்போது கொரோனா பரவல் அச்சம் காரணமாக நிலவி வரும் சூழலை பயன்படுத்திக் கொண்டு தொடங்கியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் அண்மையில் ஒதுக்கிய முறையே ரூ.40 கோடி மற்றும் ரூ.14 கோடி நிதியைக் கொண்டு கடலூர் அருகிலுள்ள செம்மங்குப்பத்தில் அமைக்கப்படும் ஆழ்துளை கிணற்றில் இருந்து  தினமும் பல கோடி லிட்டர் தண்ணீரை எடுத்து வருவதற்காக இராட்சத குழாய்கள் புதைக்கப்பட்டு  வருகின்றன. இதுதவிர பெரியப்பட்டு பகுதியில் 1200 அடி ஆழத்திற்கு ஒரு மீட்டர் விட்டம் கொண்ட 11 ஆழ்துளை கிணறுகள் அமைத்து அவற்றின் மூலம் பூமியிலிருந்து தினமும் ஒன்றரை கோடி லிட்டர்  நிலத்தடி தண்ணீரை உறிஞ்சி எடுப்பதற்கும்  தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் திட்டமிட்டுள்ளது.
 

பெரியபட்டு பகுதியில் ஜவுளி பூங்கா என்ற பெயரில் பெயரளவில் 10 ஜவுளி தொழிற்சாலைகளை  அமைத்து விட்டு, அந்த பூங்காவுக்காக அமைக்கப்படும் ஒரு கோடி லிட்டர் சாயக்கழிவுகளை தூய்மைப் படுத்தும் திறன் கொண்ட சுத்திகரிப்பு ஆலையில், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள சாயப்பட்டறை கழிவுகளை சாலைவழியாக கொண்டுவந்து சுத்திகரிப்பது தான் திட்டமாகும். கோவை பகுதியில் பல கோடி லிட்டர் சாயக்கழிவுகள் வெளியாகும் நிலையில், அவை முழுவதையும் இங்கு சுத்திகரிக்க முடியாது. அதனால், முடிந்தவரை சுத்திகரித்து, மீதமுள்ள கழிவுகளை தண்ணீருடன் கலந்து கடலில் செலுத்துவது தான் திட்டமாகும். இதற்கு வசதியாக சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நிலப்பரப்பில் 3.5 கிலோமீட்டர் தொலைவுக்கும், கடலுக்குள் 1.5 கிலோமீட்டர் தொலைவுக்கும் குழாய்கள் அமைக்கப்படவுள்ளன. கோவை மண்டல சாயப்பட்டறை முதலாளிகள் வளமாக வாழ்வதற்காக கடலூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வயிற்றில் அடிப்பதை பாமக ஒருபோதும் அனுமதிக்காது.
 

இந்த ஆலை இரு வழிகளில் கடலூர் மாவட்ட மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். முதலில் பூமியிலிருந்து தினமும் குறைந்தபட்சம் ஒன்றரை கோடி லிட்டர் நிலத்தடி நீர் எடுக்கப்படுவதாலும், அதனால் ஏற்படும் இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு கடல் நீர் ஊருக்குள் நுழைவதாலும் பெரியப்பட்டு, பெரியாண்டிக்குழி, வாண்டியாம்பாளையம், தச்சம்பாளையம், கோபாலபுரம், காயல்பட்டு, ஆண்டார் முள்ளிப்பள்ளம், வில்லியநல்லூர், புத்திரவெளி, தாழஞ்சாவடி, சான்றோர்மேடு, சிலம்பிமங்கலம், சின்னாண்டிக்குழி, புதுச்சத்திரம் உள்ளிட்ட 20 கிராமங்களில் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்படும். அதேபோல், கடலில் சுத்திகரிக்கப்படாத கழிவுகள் விடப்படுவதால் மீன் வளம் அழிந்து, அதை நம்பியுள்ள சாமியார்பேட்டை, குமராப்பேட்டை, மடவாப்பள்ளம், அன்னப்பன்பேட்டை, ரெட்டியார்பேட்டை, ஐயம்பேட்டை, பேட்டோடை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் வாழ்வாதாரம் இழப்பர்.
 

இவை தவிர நிலம் உவர்ப்பாக மாறுதல், சுற்றுச்சூழல் சீர்கேடு, குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். சுருக்கமாக கூற வேண்டுமானால், காவிரி டெல்டாவின் கடைசி எல்லையாக முப்போகம் விளையும் பூமியாக திகழும் பெரியப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் பாலைவனமாக மாறிவிடக்கூடும். இதனால் பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகளும், வனப்பகுதிகளும் அழியும் ஆபத்து உள்ளது.

 


கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களை இணைத்து அமைக்கப்படவிருந்த பெட்ரோலிய  முதலீட்டு மண்டலத்தின் ஓர் அங்கமாக இத்திட்டம் சேர்க்கப்பட்டிருந்தது. பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் கைவிடப்பட்ட போதே அத்துடன் சேர்த்து இந்தத் திட்டமும் கைவிடப்பட்டிருந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை.
 

கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள இராசயன ஆலைகளால் அப்பகுதி நச்சு பூமியாக மாறி வரும் நிலையில், அவற்றுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பது தான் கடலூர் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதை செய்வதற்கு பதிலாக இன்னொரு வேதி ஆலையை அனுமதிப்பதுடன், அதற்கு மத்திய, மாநில அரசுகள் போட்டிப் போட்டுக் கொண்டு நிதியுதவி வழங்குவது எந்த வகையிலும் நியாயமல்ல. எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு சாயக்கழிவு ஆலைக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்; மக்களின் எதிர்ப்புகளை மீறி நடத்தப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துவதற்கும் ஆணையிட வேண்டும். கட்டுமானப் பணிகள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால், கரோனா ஊரடங்கு முழுமையாக நீக்கப் பட்ட பிறகு அப்பகுதி மக்களை திரட்டி நானே தலைமையேற்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவேன்'' என கூறியுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

பா.ஜ.க கொடியைத் தீயிட்டு கொளுத்திய பா.ம.க நிர்வாகி; பின்னணி என்ன?

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
What is the background on BJP executive who set fire to BJP flag

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ‘தான் புள்ளநேரி பகுதியைச் சார்ந்தவன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.

இங்கு பஞ்சாயத்தில் உள்ள பா.ம.க நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல், பா.ஜ.க.வினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால், பா.ஜ.க.வில் ஓர் இருவர் தான் உள்ளனர்.

பா.ஜ.க நிர்வாகிகள், மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறி பா.ஜ.க.வின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதன் வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக சிறிது நேரத்தில் அந்த வீடியோவை டெலீட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.