பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
அந்த வகையில், ஐந்து முறை தமிழகத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் முதன் முறையாக நேற்று (18.03.2024) தமிழகம் வந்திருந்தார். இதனையடுத்து பா.ஜ.க. சார்பில் கோவையில் நடைபெற்ற பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது திறந்த வெளி வாகனத்தில் பேரணியாகச் சென்று சாலையில் இருபுறமும் உள்ள மக்களை நோக்கி கையசைத்தவாறே பேரணியில் ஈடுபட்டார். இந்த வாகனத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தார். இந்த பேரணியை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று மாலை 6:45 மணிக்கு நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து கேரள மாநிலம் பாலக்காடு சென்று பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்நிலையில், பாலக்காட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி சேலத்திற்கு வந்தார். அங்கு கெஜல்நாயக்கன்பட்டி என்ற இடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பரப்புரை பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றினார். முன்னதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் கைகளைப் பிடித்துக்கொண்டு மோடி நலம் விசாரித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சித் தலைவர்களான ஓ.பி.எஸ்., ராமதாஸ், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன், சரத்குமார், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், பாரத அன்னை வாழ்க. எனதருமை தமிழ் சகோதர சகோதரிகளே எனத் தமிழில் பேச்சை தொடங்கினார். மேலும், “கோட்டை மாரியம்மன் வாழும் புண்ணிய பூமிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் தி.மு.க.வுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது. தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு பற்றித்தான் நாடு முழுவதும் இப்போது பேச்சாக இருக்கிறது. ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை மறக்கவே முடியாது. கட்சிக்காக நேர்மையாக உழைத்தவர்களை படுகொலை செய்துவிட்டார்கள். ராமதாஸின் அனுபவம், அன்புமணியின் திறமை பா.ஜ.க. கூட்டணிக்கு உதவியாக இருக்கும். வளர்ச்சியடைந்த இந்தியா, வளர்ச்சியடைந்த தமிழகத்தை அமைக்க 400 இடங்களைத் தாண்ட வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தி.மு.க.வினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்து பாருங்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரான காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம்தான் எனக்கு உத்வேகம் அளித்தது. ஜி.கே. மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது காங்கிரஸ்தான்” எனத் தெரிவித்தார்.