புதுச்சேரிக்கான சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றிபெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. கடந்த 07ஆம் தேதி முதலமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று, அதன் பிறகு ஊருக்குத் திரும்பிய நிலையில், தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இன்னும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, அமைச்சரவை பதவி ஏற்கவும் இல்லை, சட்டமன்ற உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை.
இதனிடையே பாஜகவைச் சேர்ந்த கே. வெங்கடேசன், வி.பி. ராமலிங்கம், ஆர்.பி. அசோக்பாபு ஆகிய 3 பேரை மத்திய அரசு நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமித்து உத்தரவிட்டது. அமைச்சரவை, சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் பொறுப்பேற்காத நிலையில் மத்திய அரசு வெளியிட்ட இந்த உத்தரவால் புதுச்சேரியில் குழப்பம் நிலவிவருகிறது.
இந்த நிலையில், இந்த நியமன உறுப்பினர்கள் நியமனத்தை எதிர்த்தும், நியமன எம்.எல்.ஏக்கள் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும், அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவிக்கக் கோரியும் புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், கிராமப்புற மக்கள் வாழ்வாதார இயக்கத்தின் தலைவருமான கோ.அ. ஜெகந்நாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு அனிதா சுமந்த், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகிய இருவர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று (20.05.2021) விசாரணைக்குவந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணனனும், "அரசு பணியில் இருப்பவர்களை நியமன உறுப்பினர்களாக நியமிக்க மட்டுமே தடை உள்ளது. எனவே மூன்று பேர் நியமனத்தில் எந்த சட்டவிரோதமும் இல்லை" என வாதிட்டனர். மேலும், நியமன எம்.எல்.ஏக்கள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், "அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை ஏற்கக்கூடாது" என வாதிட்டனர்.
அதற்கு மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் ஞானசேகரன், "சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்காத நிலையில், நியமன உறுப்பினர்கள் நியமித்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது" என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.