சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் இன்று மாற்றுக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. அதில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ். செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்கள் அவரிடம், நீட் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறித்து தனியார் நாளிதழில் வந்த செய்தியை மேற்கோள் காட்டி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த இ.பி.எஸ். “நீட்டை எதிர்க்கிறோம். நீட் வரக்கூடாது என்பதில் முதன்மையாக இருக்கும் கட்சி அதிமுக. 2010ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி திமுகவும் காங்கிரஸும் கூட்டணியில் இருந்தபோது தான் நீட் தொடர்பான அறிவிப்பாணையை வெளியிடுகிறார்கள்.
இதற்கு பிள்ளையார் சுழி போட்டது திமுக காங்கிரஸ் கூட்டணி. ஆனால் நீட் தேர்வை எதிர்த்தது அதிமுக. நீதிமன்றத்திற்கும் சென்றோம். ஆனால் அதனை திமுக தலைவர் ஸ்டாலின் மறைக்கப்பார்க்கிறார். நீட் தேர்வைக் கொண்டுவந்தது திமுக காங்கிரஸ் கூட்டணி தான். ஆனால், நான் முதலமைச்சராக இருந்த போது நீட்டுக்கு தற்காலிக தீர்வாக அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 7.5% உள் ஒதுக்கீட்டைக் கொண்டுவந்தேன். அதேபோல், 7.5 சதவீதத்தில் மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு அரசே கல்விக் கட்டணம் செலுத்தும் எனும் உத்தரவை பிறப்பித்தேன். அவர்களுக்கு உதவியது அதிமுக அரசு” என்றார்.