திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக மாணவரணி சார்பில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வாழ்த்தரங்க நிகழ்வு நடைபெற்றது. கழக மாணவரணி செயலாளர் எழிலரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி, துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ. அராசா, திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், பெரியாரிய சிந்தனையாளர் வே.மதிமாறன், எழுத்தாளர் சுகிர்தராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் பேசிய மதிமாறன், “திமுக மாணவர் அணிக்கு என்று தனி சிறப்பு உள்ளது. இந்தித்திணிப்பை எதிர்ப்பவர்கள் இந்திக்காரர்களுக்கு எதிராக உள்ளோம் என்கிறார்கள். பாஜக கட்சியை எதிர்க்கும் கட்சிகள் 100 உள்ளன. தமிழ்நாடு முதல்வர் பிரதமராக வந்துவிடுவார்கள் என்கிறார்கள். அவர் வரட்டும். ஹிட்லரை வீழ்த்திய ரஷ்யாவின் ஸ்டாலின் போல், பாஜக ஆட்சியை திராவிட மாடல் கொண்டு வீழ்த்துவார் நம் தமிழ்நாடு முதல்வர். அதிமுக, திமுக எதிர்ப்பாளர்கள் அல்ல, அவர்கள் ஒரு கோமாளிகள். அன்று எமர்ஜென்ஸி இல்லாது இருந்திருந்தால் திமுக ஆட்சி காலம் காலமாக இருந்திருக்கும். ஸ்டாலின் கதையை முடிப்பேன் என்ற பன்வாரிலால், இன்று அவர் ஆட்சி வந்த பிறகு மிகச்சிறந்த ஆட்சி திமுக ஆட்சி தான் என்கிறார். காலை உணவு திட்டம் மிகவும் அருமையானது. இன்னும் 5 ஆண்டுகளில் மாணவர்கள் நன்றாக இருப்பார்கள்” எனப் பேசினார்.
இதையடுத்து பேசிய கரு.பழனியப்பன், “மற்ற கட்சிகள் எது பேசினாலும் திமுக பதில் சொல்லும். ஆனால், திமுக கேள்வி கேட்டால் மற்ற கட்சிகளுக்கு பதில் சொல்லத் தெரியாது. அண்ணாமலையைக் கேட்டால் கலைஞர் என்று சொல்லுகிறார். எந்தக் கட்சியை எதிர்க்கிறதோ அந்த கட்சியின் தலைவரையே தங்கள் கட்சித் தலைவர் என்று கூறுகிறது பாஜக. ஸ்டாலின் ஹீரோ ஆனது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று பதவி ஏற்ற நேரம். 20 நாட்களில் கொரோனா நோயாளிகளைச் சென்று நேரில் பார்த்தது தான் அவர் சூப்பர் ஹீரோ ஆன நேரம். ஆளுநர் ரவியை சட்டசபையை விட்டு ஓட வைத்தது தான் அவர் மாஸ் ஹீரோ ஆன நாள். கல்லூரிகளில் மாணவர் தேர்தல் வைக்க வேண்டும்.
பண்பாடு, இலக்கியம், மருத்துவம், கீழடியில் அருமையான ஒரு அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது திராவிட மாடல் ஆட்சிக்கான சான்று. மகாபாரதத்தை நம்புகிறவர்கள் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யாமல் உள்ளனர். அண்ணாவிற்கு பிறகு கலைஞருக்கு மதுரையில் நூலகம் கட்டுகிறார். கலைஞர் நடமாடும் நூலகத்தை உதயநிதி அமைக்க உள்ளார். வளர்ச்சியை ஏற்படுத்துவது தான் இந்த திமுக அரசு. ஈரோடு தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தரம் தாழ்ந்து பேசினார். அதற்கு ஸ்டாலின் பதில் சொல்லவில்லை. அவர் அதில் வெற்றி பெற்றதன் மூலம் பதில் கூறினார். எதிர்க்கட்சியாக இருந்த போதும், தற்போது முதல்வராக இருந்த போதும் ஒரு நாளும் ஸ்டாலின் தரம் தாழ்ந்து பேசியது இல்லை. சட்டமன்றம் கட்ட மிக அருமையான இடம் உள்ளது” என்றார்.