தான் பூரண குணமடையாமல் மருத்துவமனையை விட்டு கிளம்ப தயாராக இல்லை என லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், மாட்டுத்தீவண ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்ட நிலையில், ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாத நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போது அவர் ரயில் மூலமாக 16 மணிநேர பயணத்தின் மூலம் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கடந்த சில வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த லாலு பிரசாத் யாதவ், தற்போது பூரண குணமடைந்துள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அவர் அங்கிருந்து கிளம்பவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், தான் இன்னமும் குணமடையவில்லை என லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், எனக்கு இருக்கும் பிரச்சனைகளால் பலமுறை கழிவறையில் மயங்கி விழுந்திருக்கிறேன். இருதயம், சிறுநீரகம் மற்றும் சர்க்கரை நோயால் அவதிப்படுகிறேன். என் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு எய்ம்ஸ் மருத்துவமனைதான் பொறுப்பேற்க வேண்டும் என கூறியுள்ளார்.
இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று, லாலு பிரசாத் யாதவை சந்தித்து பேசினார். எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து லாலு ரிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்படுவார் என தெரிகிறது.