கடந்த வருடம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. மேலும், ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய அறிவுறுத்தல் ஒன்றையும் கொடுத்திருந்தது. அதன்படி அதிமுக வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், இன்று பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பினை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, சஞ்சய் குமார் அமர்வு வாசித்தது. இந்த தீர்ப்பில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இல்லத் திருமண நிழச்சியில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது இந்த நீதிமன்றத் தீர்ப்பு குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “இந்த திருமண விழாவிற்கு வந்து கொண்டிருந்த பொழுது செல்லூர் ராஜு மற்றும் உடன் வந்திருந்த அனைவரும் எம்ஜிஆர் சிலைக்கும் ஜெயலலிதா சிலைக்கும் மாலை அணிவித்துவிட்டுச் செல்லலாம் என்று சொன்னார்கள். அதேபோல் இன்று 51 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது என்பதாலும் நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். அப்போது நான் வேண்டிக் கொண்டேன். இது அற்புதமான திருமண நாள். 51 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறுகிறது. உங்கள் இருவரது ஆசியோடு நடைபெறும் இந்த திருமண நாளின் போது நீதிமன்றத்திலும் நல்ல தீர்ப்பு நமக்கு கிடைக்க வேண்டும் என்று கேட்டேன். ஆகவே சில நிமிடங்களில் அற்புதமான தீர்ப்பு வந்தது. அது சக்தி மிக்க தலைவர்கள் கொடுத்த வரப்பிரசாதம்.
திமுகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே அதிமுகவை தோற்றுவித்தவர் எம்ஜிஆர். அதேபோல் ஜெயலலிதாவும் எம்ஜிஆர் வழியில் நின்று அவரது பாதையில் சென்று திமுகவை வெல்ல வேண்டும் என்று ஆட்சி செய்தார். உச்சநீதிமன்றத் தீர்ப்பு எப்படி இருக்குமோ என்று இரவெல்லாம் தூங்காமல் தவித்தேன்; கலங்கி போயிருந்தேன்” எனக் கூறினார்.