திருவண்ணாமலை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, மார்ச் 28 மற்றும் 29-ம் தேதிகளில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சில பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.
அதன்படி மார்ச் 28-ம் தேதி இரவு விதிகளை மீறி நகரத்தின் மையத்தில் மேடையமைத்து பொதுக்கூட்டம் நடத்தியது அதிமுக. இதில் கலந்துகொண்டு பேசிய எடப்பாடி, அக்ரி.கிருஷ்ணமூர்த்தி குற்றவாளி என திமுக குற்றம்சாட்டுகிறது. அவர் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் விடுதலையானவர். 2ஜீ வழக்கு மேல்முறையீட்டில் உள்ளது. அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, நல்லவர், மக்களுக்கு நல்லது செய்வார் என்றவர், எங்கள் கட்சி தலைவி ஜெயலலிதா இறப்புக்கு நீதி கேட்கிறேன் என கிளம்பியுள்ளார் ஸ்டாலின். எங்கள் கட்சி விவகாரத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், உங்கள் வேலையை பாருங்கள் என்றார்.
வேட்பாளர் நல்லவர், அவர் விடுதலை செய்யப்பட்டார் என்று சொல்வதை அதிமுகவினர் பலர், ஒரு முதல்வர் பொய் சொல்லலாமா என புலம்புகின்றனர். இதுப்பற்றி நாம் பல்வேறு தரப்பினரிடம் பேசியபோது, கடந்த 2011-2016 காலக்கட்டத்தில் வேளாண்மை துறை அமைச்சராக இருந்தபோது, திருநெல்வேலியை சேர்ந்த வேளாண்மை அதிகாரி முத்துக்குமாரசாமியிடம், புதியதாக வேலைக்கு சேருபவர்களிடம் ‘லஞ்சம் வாங்கி தா’ என நெருக்கடி தந்ததால் அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இது அப்போது பெரும் பிரச்சனையானதும், வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது, அமைச்சர் பதவியில் இருந்து அக்ரி.கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டார். பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிணையில் சிறையில் இருந்து வெளியில் வந்தாலும், கட்சியில் இருந்து ஓரம் கட்டி வைக்கப்பட்டார்.
பிணையில் வெளியே வந்தவர், முத்துக்குமாரசாமி இறப்புக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. என்னை வழக்கில் இருந்து விடுவியுங்கள் எனச்சொல்லி வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்து அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், தமிழகரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அப்படியிருக்க, அந்த வழக்கில் இருந்து விடுதலையாகிவிட்டார் என முதல்வரே சொல்வது வேதனையாக இருக்கிறது, இவர் ஒரு அரசு அதிகாரியை தற்கொலைக்கு தூண்டிய விவகாரத்தை எதிர்கட்சிகள் மட்டும் பேசவில்லை, மக்களும் பேசுகிறார்கள், இதனை உளவுத்துறை மூலம் அறிந்தே நல்லவர் என சர்டிஃபிகேட் தருகிறார் என்றார்கள்.
கடந்த மாதம் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியின் மகன் திருமண வரவேற்புக்கு முதல்வர் எடப்பாடி வந்தபோது, குற்றவாளியின் இல்ல திருமணத்துக்கு வரக்கூடாது என கலசப்பாக்கம் அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜன் போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்து முதல்வருக்கு பெட்டிஷன் அனுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், தமிழகரசே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதுவும் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது செய்யப்பட்டது. அப்படியொரு முக்கிய வழக்கை மறைத்து பொதுமக்கள் முன்னால், முதல்வர் பொய் பேசுவது சரியா?. அந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, தமிழகரசு என்ன முறையில் நடந்துகொள்ளும் என்பது இதன்மூலம் தெரிகிறது என அரசு ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் நொந்துபோய் புலம்புகின்றனர்.
29-ம் தேதி கீழ்பென்னாத்தூர் உட்பட விழுப்புரத்துக்கு பிரச்சாரத்துக்கு சென்றார். திருவண்ணாமலை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தபோது, அதிமுக வேட்பாளர் குற்றமற்றவர் என்கிற பிரச்சாரத்தையே திரும்ப திரும்ப பொய்யை உதிர்த்தார் எடப்பாடி பழனிசாமி.