முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சியின் அலுவலகத்திற்கு சென்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து, கட்சி அலுவலகத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகத்தை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் தொடங்கி வைத்தனர். தமிழகம்- ரூபாய் 15,000, புதுச்சேரி- ரூபாய் 5,000, கேரளா- ரூபாய் 2,000 என விருப்ப மனுவுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மார்ச் 5- ஆம் தேதி வரை தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை விருப்ப மனு பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம்.
அதன் தொடர்ச்சியாக, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் விருப்ப மனு அளித்தனர். அதேபோல், அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியிலும், செங்கோட்டையன் மீண்டும் கோபிச்செட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதியிலும், எஸ்.பி. வேலுமணி மீண்டும் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளனர்.
இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் தங்களது தொகுதிகளிலேயே மீண்டும் போட்டியிட அதிக வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.