கடந்த 76 ஆண்டுகளாக உணவு மற்றும் தண்ணீர் எதுவுமே எடுத்துக்கொள்ளாமல் வாழ்ந்ததாக நம்பப்படும் சாமியார் நேற்று உயிரிழந்தார்.
குஜராத் மாநிலம் மேக்சனா மாவட்டம், சாரோட் கிராமத்தில் வசித்து வந்த பிரகலாத் ஜனி எனும் சாமியார் கடந்த 76 ஆண்டுகளாக எந்தவிதமான உணவோ அல்லது தண்ணீரோ எடுத்துக்கொள்ளாமல் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்து இந்தியா முழுவதும் பிரபலமானார். குஜராத் மக்கள் இவரை ‘மாதாஜி’ என்று அழைப்பதோடு, இவரை வணங்கியும் வந்தனர். பிரகலாத் ஜனி 14 வயதிலேயே ஆன்மீக ஈடுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி, துறவு வாழ்க்கை மேற்கொண்டார். உணவு ஏதும் எடுத்துக்கொள்ள மாட்டேன் எனக்கூறிய இவர், தியானம் செய்து அதன் மூலம் காற்றை மட்டுமே உணவாக எடுத்துக்கொள்வேன் எனக்கூறி மக்களை வியப்பில் ஆழ்த்தினார். கோயில் ஒன்றின் அருகே சிறிய குகை போன்ற ஆசிரமத்தை அமைத்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த இவரை பிரதமர் மோடி உட்பட பலரும் நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர். இப்படி குஜராத் முழுவதும் புகழ்பெற்ற இந்த சாமியார் நேற்று உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.