உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நெருங்கி வருகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் உச்சக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய கட்சி தலைவர்கள் இந்த 5 மாநிலங்களுக்கும் பயணம் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ராகுல் காந்தி நேற்று கோவா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது காங்கிரஸ் வேட்பாளர்கள் ராகுல் காந்தி முன் தேர்தலுக்கு பிறகு கட்சி தவமாட்டோம் என சத்திய பிரமாணம் எடுத்துக்கொண்டனர். ஏற்கனவே கோயில், மசூதி, தேவாலயங்களில் கட்சி தவமாட்டோம் என சத்திய பிரமாணம் எடுத்துக்கொண்ட காங்கிரஸ் வேட்பாளர்கள், நேற்று இரண்டாவது முறையாக ராகுல் காந்தி முன்னர் சத்திய பிரமாணம் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017 ஆம் ஆண்டு கோவா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களையும், பாஜக 13 இடங்களையும் வென்றது. ஆனாலும் பாஜக சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அதனைத்தொடர்ந்து 12க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவிற்கு தாவினர். அதன் எதிரொலியாக காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை சத்திய பிரமாணம் எடுக்க செய்துள்ளது.
இதற்கிடையே கோவாவில் மெய்நிகர் பிரச்சார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, கோவாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நியாய் திட்டம் தொடங்கப்படும். அதன்மூலம் மாதத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் என வருடத்திற்கு 72 ஆயிரம் ரூபாய் கோவாவின் ஏழை மக்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவித்துள்ளார்.