யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் ரூபாய் 2,000 கோடி முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தனியார் வங்கியான 'யெஸ் வங்கி' (YES BANK) வாராக் கடன் அதிகாரிப்பால் நிதிச் சுமையில் சிக்கித் தவித்து வரும் நிலையில், அந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அச்சமடைய வேண்டாம் என்றும், பொதுமக்களின் பணத்திற்கும், அதற்கான வட்டிக்கும் எந்தவித பாதிப்பும் இருக்காது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த நிலையில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை இன்று அதிகாலை (08/03/2020) மத்திய அமலாக்கத்துறையினர் கைது செய்து மும்பை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். அதன் பிறகு அமலாக்கத்துறையினர் ராணா கபூரை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதையடுத்து யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை நான்கு நாள் (மார்ச் 11- ஆம் தேதி வரை) காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.
அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணையில் யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் ரூபாய் 2,000 கோடி முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 44 விலை உயர்ந்த ஓவியங்களை வாங்கியது, 12 போலி நிறுவனங்களில் முதலீடு செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.