தொடர்ந்து உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை ரத்து செய்யக் கோரியும், எரிபொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்தும் புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநிலம் முழுவதும் இன்று (08.07.2021) அனைத்து பெட்ரோல் பங்க்குள் முன்பும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதுச்சேரி - ஆம்பூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பாக கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கிவைப்பதற்காக வந்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, அவரது வீட்டிலிருந்து பெட்ரோல் பங்க் வரை சைக்கிள் ஓட்டி வந்து தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி.எஸ். சுப்பிரமணியம், பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட வந்த பொதுமக்களிடம் மத்திய அரசுக்கு எதிராக கையெழுத்து பெற்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, “காங்கிரஸ் ஆட்சியின்போது எரிபொருள் விலை ஒரு ரூபாய் உயர்த்தியற்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கட்டை வண்டியில் பாராளுமன்றம் சென்ற நிகழ்வு நிகழ்ந்தது. ஆனால் தற்போது ஒரே மாதத்தில் 16 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனைக் குறைக்கும் வகையிலும், மத்திய அரசைக் கண்டித்தும் இன்றுமுதல் வரும் 17ஆம் தேதிவரையிலும் தொடர் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.
தற்போதைய துணைநிலை ஆளுநர் காங்கிரஸ் ஆட்சியின்போது பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினார். தற்போது அவர் என்ன பதில் கூறுவார்?” என்று கேள்வியெழுப்பினார். கையெழுத்து இயக்கத்திலும், கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஏராளமான காங்கிரஸார் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்தனர்.