ஒரு பெண் ஐ.ஏ.எஸ். ஆகவே இருந்தாலும், சராசரி பெண்கள் அனுதினமும் சந்தித்துவரும் பிரச்சனைகளைச் சந்தித்தே தீரவேண்டும். இதற்கு நானும் விதிவிலக்கல்ல என்று, ஐ.ஏ.எஸ். அதிகாரியும் டெல்லி மாநகராட்சி ஆணையருமான வர்ஷா ஜோஷி கருத்து வெளியிட்டுள்ளார்.
ஸ்வாதி என்ற பெண் வர்ஷா ஜோஷியிடம் ‘எந்தவொரு பெண்ணும் இந்த வீதியைக் கடந்து செல்வது மிகவும் கடினம். ஏனென்றால், வீதிகளில் ஹூக்கா புகைக்கின்றனர். சீட்டு விளையாட்டு என்ற பெயரில் சூதாடுகின்றனர். அந்த மனிதர்கள் வீதிகளில் செல்லும் பெண்களை முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இது எங்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கிறது. இதுகுறித்த புகாருக்கெல்லாம் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை. பெண்களுக்கு உதவிடும் வகையில் நீங்கள் நடவடிக்கை எடுக்கலாமே?’ என்கிற ரீதியில், மூன்று புகைப்படங்களுடன் புகார் அளித்துள்ளார்.
ட்விட்டரில் ஸ்வாதிக்கு பதிலளித்திருக்கும் வர்ஷா ஜோஷி ‘நியாயமாக இதுபோன்ற புகார்களுக்கு காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். வட இந்தியாவில், இதுபோன்ற பிரச்சனைகள், ஒவ்வொரு நாளும் பெண்கள் எதிர்கொள்ள வேண்டிய சவாலாக இருக்கிறது. அட, எனது அலுவலகத்தில் நானே இந்தத் தொந்தரவை அனுபவித்திருக்கிறேன். ஆண்கள் ஏன் இப்படி நடந்துகொள்கின்றனர்? வேலை பார்க்கும் இடத்தில் ஆண்களின் மனநிலை ஏன் இப்படி இருக்கிறது? இதற்கெல்லாம் என்னதான் தீர்வு?’ என்று தன் பங்குக்கு ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பாட்டி, தாய், மனைவி, மகள், அக்கா, தங்கை என ஒவ்வொரு ஆணுக்கும் குடும்ப உறவுகளாகப் பெண்கள் உள்ளனர். பெரும்பாலானோர் வழிபடுவதும் பெண் தெய்வங்களாகவே இருக்கின்றன. இந்த பாரத பூமியில் ‘வெட்டுப்பட்ட புண்; விம்மி நிற்கும் கட்டி.’ என்று பெண்ணின் உறுப்புக்களை வேறு கோணத்தில் விமர்சித்த ஞானிகளும் உண்டு. ஒரு பெண்ணை சக மனுஷியாகப் பார்த்தாலே போதும். அத்தகைய ஆண்கள் இதை உணரவேண்டும்.