உத்தரப்பிரதேச மாநிலம், சன்பத்ரா மாவட்டத்தில் உள்ள துத்தி சட்டப்பேரவைத் தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராம்துலார் கோண்ட்-க்கு செஷன்ஸ் நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், சன்பத்ரா மாவட்டத்தில் உள்ள துத்தி பகுதியைச் சேர்ந்தவர் ராம்துலார் கோண்ட். இவர், கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 4ம் தேதி ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். பாதிக்கப்பட்ட அச்சிறுமியின் சகோதரர் அளித்த புகார் அடிப்படையில் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.மேலும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 2 பிரிவுகளில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. பிறகு இந்த வழக்கு போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ராம்துலார் கோண்ட், பா.ஜ.க. சார்பில் துத்தி தொகுதியில் நின்று வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார். இதனைத் தொடர்ந்து சிறுமி வன்கொடுமை வழக்கு போக்ஸோ நீதிமன்றத்தில் இருந்து எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் ராம்துலார் கோண்ட் குற்றவாளி என அறிவித்துள்ளது.
குற்றவாளியான ராம்துலார் கோண்ட்-க்கான தண்டனை விவரத்தை நீதிமன்றம் நேற்று அறிவித்தது. அந்தத் தண்டனை விவரத்தில், ராம்துலார் கோண்ட்-க்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதால், அவர் எம்.எல்.ஏ. பதவியை இழந்துள்ளார்.