Skip to main content

ஜேஎன்யு பல்கலைக்கழக சுவரில் கிறுக்கப்பட்ட வாசகங்கள்; பதற்றத்தில் டெல்லி 

Published on 03/12/2022 | Edited on 03/12/2022

 

Slogans scrawled on the walls of JNU University; Delhi in tension

 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கம்யூனிச, அம்பேத்கரிய மாணவர்கள் இயக்கத்துக்கும் இந்துத்துவ ஏ.பி.வி.பி மாணவர்கள் இயக்கத்துக்குமிடையே அடிக்கடி தகராறு நடப்பது வழக்கமான ஒன்று. கடந்த நான்காண்டுகளில் மட்டும் சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டம், தேர்வு முறைக்கு எதிரான போராட்டம் என்று பல்வேறு போராட்டங்களைச் சந்தித்திருக்கிறது. காவல்துறையினர் தடியடி நடத்திய நிகழ்வுகளும் நடந்திருக்கிறது. சமீபத்தில் ராம நவமியன்று அங்குள்ள விடுதியில் வழக்கம்போல் அசைவ உணவு பரிமாறப்பட்டதற்கு இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தது பிரச்சனையானது. கடந்த நவம்பரில்கூட மாணவர் குழுவுக்குள் நடந்த பிரச்சனையில் காவல்துறை வரைக்கும் புகார் சென்றது.

 

இப்படியான சூழலில்தான், கடந்த இரு நாட்களுக்கு முன்னர் இங்குள்ள பேராசிரியர்களின் அறைச்சுவர்களில் பிராமணர்களுக்கு எதிரான வாசகங்களை சிவப்பு வண்ண பெயிண்ட்டால் யாரோ எழுதியது சர்ச்சையாகியிருக்கிறது. சிவப்பு வண்ண பெயிண்ட்டால் 'பிராமணர்களே இங்கிருந்து வெளியேறுங்கள்', 'ஷாகாவுக்கே திரும்பிச் செல்லுங்கள்', பிராமணர்களே பனியாக்களே உங்களைத் தேடி வருகிறோம்', 'ரத்தம் சிந்த வேண்டியிருக்கும்' என்பது போன்ற மிரட்டலான வாசகங்கள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதப்பட்டிருந்தது பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. இதுதொடர்பாக விசாரணைக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

 

இதுவரை அந்த வாசகங்களை எழுதியவர்கள் யாரென்பது கண்டறியப்படவில்லை. பிராமணர்களுக்கு எதிரானவர்கள் எழுதியிருப்பார்களா அல்லது சர்ச்சையை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக இந்துத்துவ அமைப்பினரே இதுபோன்று செய்திருப்பார்களா என்பது தெரியவில்லை. இந்த வாசகங்கள் குறித்த செய்தி பரவத் தொடங்கவுமே கல்லூரியைத் தாண்டி, பொதுவெளியிலும் பலராலும் கண்டிக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் #BrahminLivesMatter என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி பிராமணர்களுக்கு ஆதரவான பதிவுகளைப் போடத் தொடங்கினார்கள். இந்த விவகாரத்தில் இதுவரை எழுதியவர்களைக் கண்டறிய முடியாத நிலையில், பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் அமைப்பு இச்செயலை வன்மையாகக் கண்டித்துள்ளது. இதற்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளது. 

 

ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பினரோ கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள்தான் இதுபோன்ற செயல்களில் இறங்கி சமூக அமைதியைக் கெடுப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளனர். பள்ளி, கல்லூரி சுவர்களில் ஜாதி, மத ரீதியான வாசகங்கள் எழுதப்பட்டு அதன்மூலம் மிகப்பெரிய கலவரம் நடப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது யாராக இருந்தாலும் அவர்களை விரைவாகக் கண்டறிந்து சட்டப்படி கடுமையான தண்டனையை வழங்க வேண்டும். கல்விக்கூடங்களில் ஜாதி, மத ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும். 

 

 

சார்ந்த செய்திகள்