மத்தியப் பிரதேசத்தில் ரீவா சூரிய மின்சக்தி திட்டம் ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டம் எனப் பிரதமர் மோடி தெரிவித்ததைச் சுட்டிக்காட்டி அவரை விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி.
மத்தியப்பிரதேசம் மாநிலம், ரீவாவில் கட்டப்பட்ட சூரிய மின்சக்தி நிலையத்தை நாட்டுக்குப் பிரதமர் நேற்று அர்ப்பணித்தார். 750 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் 500 ஏக்கரில் சூரிய மின்சக்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய சூரிய மின் க்தி நிலையத்தால் 15 லட்சம் டன் கரியமில வாயு தடுக்கப்படும். புதிய சூரிய மின்சக்தி நிலையத்தின் மின்சாரத்தில் 24% டெல்லி மெட்ரோ நிறுவனத்துக்கு வழங்கப்படும். எஞ்சிய 76% மின்சாரம் மத்தியப் பிரதேச மின் பகிர்மான நிறுவனங்களுக்கு வழங்கப்படஉள்ளது. ஆசியாவிலேயே இது மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டம் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், "கர்நாடகாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பவகாடா பார்க்கில் 2,000 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டம் திறக்கப்பட்டதுதான் ஆசியாவிலேயே மிகப்பெரியது என்று நிரூபிக்கப்பட்டுள்ளபோது இதை எவ்வாறு பெரியது எனத் தெரிவிக்க முடியும்" எனக் கேள்வியெழுப்பி இருந்தார்.
இந்நிலையில் "ரீவா நகரம் வெள்ளைப்புலிகளுக்கும், நர்மதை நதிக்கும் மட்டுமே அடையாளமாக இருந்த நிலையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டம் உள்ள நகராகவும் அடையாளம் பெறும்" எனப் பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது. இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ராகுல் காந்தி, "அசாத்தியகிரஹி" (உண்மைக்காகப் போராடுவதில் நம்பிக்கை இல்லாதவர்கள்) என விமர்சித்துள்ளார்.