நீட் தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்தியப்பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த விதி சூர்யவன்ஷி என்ற மாணவி மருத்துவராகும் கனவில் அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வினை எதிர்கொண்டுள்ளார். தேர்வில் நல்ல மதிப்பெண் வரும் எதிர்பார்த்திருந்த அந்த மாணவிக்கு, முடிவு வெளியான நாளன்று மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தேர்வு முடிவுகளைச் சரிபார்த்தபோது, தேர்வு முடிவில் தனக்கு ஆறு மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டிருப்பதைக் கண்டு விதி சூர்யவன்ஷி அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நன்றாகப் படிக்கும் தனது மகள் குறைவான மதிப்பெண்களைப் பெற்றது குறித்து சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர்கள் விடைத்தாளைப் பெறுவதற்கு விண்ணப்பித்தனர். இதில், விடைத்தாளை வாங்கிப் பார்த்தபோது, மாணவி 590 மதிப்பெண்கள் பெற்றிருப்பது கண்டறியப்பட்டது. இந்தச் சூழலில், தேர்வு முடிவில் ஏற்பட்ட இந்தக் குளறுபடி தங்கள் மகளின் வாழ்க்கையையே பறித்துவிட்டதாகக் கண்ணீர் விடுகின்றனர் மாணவியின் பெற்றோர்கள்.