முன்னாள் பிரதமர் தேவகவுடாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவும் வேளையில், பிரதமர் மோடி, தேவேகவுடாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத நிலையில் நீண்ட இழுபறி ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் - மஜத கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரின. அதே நேரத்தில் 104 தொகுதிகள் வென்று தனிப்பெரும் கட்சியாக விளங்கிய பாஜகவும் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரின. ஆளுநர் பாஜக ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இதைதொடர்ந்து கர்நாடகாவின் 23வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார்.
இதனிடையே பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளில் உள்ள எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பாஜகவின் குதிரைப் பேரத்தில் இருந்து தங்கள் எம்.எல்.ஏக்களை பாதுகாக்க மஜத மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மைசூரில் உள்ள ஈகிள்டன் ரிசார்ட்டில் கடும் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர்.
இந்நிலையில், மஜத கட்சியின் தலைவர் தேவேகவுடாவின் பிறந்த நாளை முன்னிட்டு, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தேவேகவுடாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த தகவலை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Spoke to our former Prime Minister Shri HD Deve Gowda Ji and conveyed birthday wishes to him. I pray for his good health and long life.
— Narendra Modi (@narendramodi) May 18, 2018
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியதாவது,
முன்னாள் பிரதமர் எச்.டி தேவேகவுடாவை தொடர்பு கொண்டு, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தேன். தேவேகவுடா, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.