பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2020 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தது. தொடர்ந்து அதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதலளித்தது. இந்தநிலையில் மத்திய அமைச்சரவை, புதிய கல்விக்கொள்கைக்கு ஒப்புதலளித்து ஒரு வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி, பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.
அப்போது அவர், புதிய கல்வி கொள்கை, நாடு தங்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்ற உறுதியை மாணவர்களுக்கு வழங்கும் என தெரிவித்துள்ளார். புதிய கல்வி கொள்கை தொடர்பாக பிரதமர் மோடி ஆற்றிய உரை வருமாறு:
புதிய கல்விக் கொள்கை ஒரு வருடம் நிறைவடைந்துள்ளதையொட்டி, அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன். தொற்றுநோய்க்கு மத்தியிலும், லட்சக்கணக்கான குடிமக்கள், ஆசிரியர்கள், தன்னாட்சி அமைப்புகளின் பரிந்துரைகளாலும், பணிக்குழுவை நியமித்ததன் மூலமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
நமது எதிர்காலம் இளைஞர்களுக்கு வழங்கப்படும் கல்வியைப் பொறுத்தது. நம் நாட்டின் இளைஞர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புகிறார்கள். இந்த புதிய கல்விக் கொள்கை, நாடு அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்ற உறுதியைஇளைஞர்களுக்கு அளிக்கும். இப்போது தொடங்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டம், நமது இளைஞர்களை எதிர்கால நோக்குடையவர்களாக ஆக்கும். செயற்கை நுண்ணறிவால் உந்தப்படும் ஒரு பொருளாதாரத்தை உருவாக்க வழியை ஏற்படுத்தும்.
பொறியியல் பாடத்திட்டத்தை 11 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க ஒரு கருவி உருவாக்கப்பட்டுள்ளது. எட்டு மாநிலங்களில் உள்ள 14 பொறியியல் கல்லூரிகள், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் வங்காளம் ஆகிய ஐந்து இந்திய மொழிகளில் விரைவில் பொறியியல் படிப்பை தொடங்கப்போகின்றன என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். முதல் முறையாக, இந்திய சைகை மொழிக்கு ஒரு மொழி பாடத்தின் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இப்போது மாணவர்கள் இதை ஒரு மொழியாகவும் படிக்க முடியும்.
இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.
பிரதமர் மோடி இந்த நிகழ்வில் தேசிய டிஜிட்டல் கல்வி கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு பாடத்தை இணையத்தில் நடத்துவது உள்ளிட்ட சில திட்டங்களை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.