நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
அதே வேளையில், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மக்களவைத் தேர்தலோடு சட்டசபைத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இதனால், அந்த மாநிலங்களிலும் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நமது அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வருகிற மே 13ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தலோடு சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது.
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்று சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. அதே சமயம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டையும், நிர்வாகத்திறன் குறித்து தெலுங்கு தேசம் கட்சி விமர்சனம் செய்து வருகிறது. அதே போல், தெலுங்கு தேச கட்சியை பற்றியும் விமர்சனங்களையும், குற்றச்சாட்டையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் முன்வைத்து வருகிறது.
175 சட்டசபை தொகுதிகளும், 25 மக்களவைத் தொகுதிகளையும் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அனைத்து இடத்திலும் தனித்து போட்டியிடுகிறது. இதில், பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம் மக்களவைத் தொகுதிகளில் 17 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 2 இடங்களிலும், பா.ஜ.க 6 இடங்களிலும் போட்டியிட உள்ளது.
இந்த நிலையில், ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தன்னைத் தாக்க முயற்சி நடப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது தொடர்பாக, சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “என்னை சந்திக்க மக்கள் அதிக அளவில் வரும் போதல்லாம், என்னை தாக்க வேண்டும் என்ற இலக்குடன் ஒரு சிலர் பிளேடுகளுடன் கூட்டத்திற்குள் ஊடுருவி விடுகிறார்கள். அவர்களை கண்டறிந்து பிடிப்பதே எனது பாதுகாப்பு டீமிற்கு முக்கிய வேலையாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் தான் இதை செய்கிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் குறைந்தது 200 உறுப்பினர்களை அழைத்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வேன். அப்போது, உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படும். அதே நேரம், பெரிய கூட்டங்களின் போது, என்னை தாக்க வேண்டும் என்பதற்காக சிலர் அடியாட்களை அமர்த்துகிறார்கள். அவர்கள் தங்கள் கைகளில் பிளேடுகளை எடுத்து வந்து என்னை தாக்க முயற்சி செய்கின்றனர். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூட இதுபோன்ற நிகழ்வு நடந்தது” என்று தெரிவித்தார். பவன் கல்யாணின் இந்த குற்றச்சாட்டு ஆந்திரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.