சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்பினரும் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலக கட்டிடத்திற்கு முன்பாக கடந்த ஒரு மாதமாக பாஜவினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கேரள பாஜகவின் இந்த போராட்டத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஜனவரி -6ம் தேதி சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தனம்திட்டாவில் பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த பா.ஜ.க தலைமை முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். பாஜக மூத்த தலைவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்தக் கூட்டம் கேரளாவில் பாஜகவின் முதல் தேர்தல் பிரச்சாரக் கூட்டமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் ஜனவரி 27-ம் தேதி திருச்சூரில் நடைபெறும் கேரள பாஜக இளைஞரணி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.