அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு விரைவில் மின்சார கார்கள்!
மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் துறைரீதியிலான பயன்பாட்டுக்காக, மின்சார கார்கள் வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
உலக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் மூன்றாவது இடம் வகிக்கும் நாடு இந்தியா. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் வாகனப் போக்குவரத்தில் புதுப்பிக்கத்தக்க சக்தியைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. இந்நிலையில், இந்தியாவும் இதைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது. இதில் முதற்கட்டமாக மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு 1,000 மின்சார கார்களை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
மேலும், ஒட்டுமொத்தமாக 10,000 கார்களும், அவற்றின் பேட்டரிகளில் மின்சாரம் நிரப்ப நாடு முழுவதும் 4,000 எரிசக்தி ஏற்றும் நிலையங்களையும் அமைக்க உள்ளனர். முதற்கட்டமாக அரசு துறைகளில் இருந்து இதனைத் தொடங்குவோம் என மத்திய நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
எனர்ஜி எஃபியன்சி சர்வீஸஸ் லிட் என்ற நிறுவனம் இதற்கான பொறுப்பை ஏற்றுள்ளது. வரும் நவம்பரில் 1,000 மின்சார கார்கள் வாங்கப்படும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 120-150 கிமீ வரை பயணம் செய்ய முடியும். டெல்லியில் மட்டும் 400 கார்கள் பயன்பாட்டில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கார்களின் மூலம் சுற்றுச்சூழல் மாசினை பெரும் அளவில் தவிர்க்க முடியும் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ச.ப.மதிவாணன்