துபாயிலிருந்து திரும்பிய நபர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட சூழலில் அவர் கொடுத்த விருந்தில் பங்கேற்றவர்கள், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என 26,000 பேர் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் நடந்துள்ளது.
உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரசால் சர்வதேச அளவில் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69,000-ஐ கடந்துள்ளது. 2,64,000 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை 4000க்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 109 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் இந்தக் கரோனாவைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14 வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் துபாயிலிருந்து திரும்பிய நபர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட சூழலில் அவர் கொடுத்த விருந்தில் பங்கேற்றவர்கள், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என 26,000 பேர் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்தியப்பிரதேசத்தின் மொரேனா நகரைச் சேர்ந்த ஒரு நபர், துபாயில் தனியார் உணவகத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த மாதம் அவரது தாய் உடல்நிலை சரியில்லாமல் இறந்துபோனதால், மார்ச் 17 அன்று அவர் இந்தியா வந்துள்ளார். தாயின் இறுதிச் சடங்குகளை முடித்த அவர், தங்கள் குடும்ப வழக்கப்படி 13 ஆவது நாள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து விருந்து அளித்துள்ளார். இதில் சுமார் 1200 பேர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் துபாயிலிருந்து வந்த அந்த நபர் மற்றும் அவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. மருத்துவமனைக்குச் சென்ற அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது, இதனையடுத்து அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் குறித்து விசாரணை நடந்தபோது, விருந்து நடந்தது குறித்து அதிகாரிகளுக்குத் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து விருந்தில் பங்கேற்ற 1200 பேர் கண்டறியப்பட்டு சோதனை செய்யப்பட்டதில் அதிலும் பலருக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளன. பின்னர் அந்த 1200 பேருடன் தொடர்பிலிருந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டபோது, விருந்துக்குப் பின்னரும் அவர்கள் தங்கள் பகுதியில் பல இடங்களுக்குச் சென்று வந்ததும், பலருடன் தொடர்பில் இறந்ததும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து 26,000 பேரைக் கொண்ட அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு, மக்கள் அனைவரையும் வீட்டில் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், விருந்தில் பங்கேற்ற அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.