நிலவில் ஆய்வு செய்வதற்கான முன்னெடுப்புகளை உலக நாடுகள் பலவும் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியா சார்பில் சந்திரயான்-3 என்ற விண்கல தயாரிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 இன்று விண்ணில் பாய்ந்தது.
இதற்கு முன்பாகவே 2008 ஆம் ஆண்டு சந்திரயான்-1, 2019-ல் சந்திரயான்-2 ஆகியவை விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது. அதில் சந்திரயான்-2 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையைச் சென்றடைந்த போதிலும் தொழில்நுட்பக் கோளாறால் லேண்டர் கருவி திட்டமிட்டபடி தரையிறங்காமல் வேகமாகத் தரையிறங்கியதால் வெடித்துச் சுக்குநூறாக உடைந்தது.
இதையடுத்து இஸ்ரோ மீண்டும் நிலவை ஆய்வு செய்ய ரூ. 615 கோடி மதிப்பில் சந்திரயான்-3 என்ற விண்கலத்தை வடிவமைத்துள்ளது. நிலவுக்குச் செல்லும் 'சந்திரயான்-3' விண்கலத்தைச் சுமந்தபடி, எல்.வி.எம்3-எம்4 ராக்கெட் இன்று பிற்பகல் 2.35 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் பாய்ந்தது. ஆகஸ்ட் 23 அல்லது 24 ஆம் தேதிகளில் சந்திரயான்-3 விண்கலத்தை நிலவில் இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். சந்திரயான்-3 வெற்றி பெற்றால் நிலவுக்கு விண்கலம் அனுப்பியுள்ள அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய உலக நாடுகளின் வரிசையில் 4வது நாடாக இந்தியா இடம்பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து ட்விட்டரில், “இன்று நம்மில் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் வானத்தைப் பார்த்து பெருமையுடன் பிரகாசிக்கிறோம். சந்திரயான் 3 என்பது 1962 இல் இந்தியாவின் விண்வெளித் திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து விஞ்ஞான சமூகம் பல தசாப்தங்களாக உழைத்த உழைப்பின் பலனாகும். அதைத் தொடர்ந்து 1969 இல் இஸ்ரோ உருவாக்கப்பட்டது. இந்த பணியின் வெற்றி, சந்திரனின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கும் நான்காவது நாடாக நம்மை மாற்றி இருக்கிறது. உண்மையிலேயே இது மாபெரும் சாதனையாகும். இஸ்ரோவில் உள்ள ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.