கரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் சிக்கியிருந்த தங்களது நிறுவனத்தின் 206 இந்திய ஊழியர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் தனி விமானம் மூலம் இந்தியா அழைத்து வந்துள்ளது இன்ஃபோசிஸ் நிறுவனம்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாகச் சர்வதேச விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், அமெரிக்காவில் உள்ள இன்ஃபோசிஸ் அலுவலகங்களில் பணியாற்றச் சென்ற நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் அங்கேயே சிக்கிக்கொள்ளும் சூழல் உருவானது. இந்நிலையில் ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் நலன் கருதி தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் 206 ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் இந்தியா அழைத்து வந்துள்ளது இன்ஃபோசிஸ் நிறுவனம்.
இந்தியாவில் பணியாற்ற விருப்பம் தெரிவித்தோர் மற்றும் இந்தியாவில் பணியாற்ற வேண்டிய சூழலில் இருப்போர் ஆகியோரைத் தேர்வு செய்து இந்த விமானத்தில் அழைத்து வந்தது அந்நிறுவனம். ஞாயிற்றுக் கிழமையன்று சான்ஃபிரான்சிஸ்கோ நகரிலிருந்து 206 ஊழியர்கள், 100-க்கும் மேற்பட்ட அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருடன் புறப்பட்ட தனி விமானம் நேற்று பெங்களூரு வந்தடைந்தது. அதன்பின்னர் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் விதிமுறைப்படி பயணிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.