தென்காசி மாவட்டம் புளியரை அருகேயுள்ளது கேரள மாநில எல்லைப்பகுதி. புளியரைக்கும் கேரளாவின் கோட்டைவாசலுக்கும் இடையேயுள்ள இந்தப் பகுதிகளில் இரு மாநிலங்களின் வணிக வரி, சுங்கம் மற்றும் போலீஸ் சோதனைச் சாவடிகள் உள்ளன. கோட்டை வாசலைத் தொடர்ந்து கேரளாவின் ஆரியங்காவு நகரிலிருந்து கேரளப் பகுதிகள் தொடங்குகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரளாவின் ஆரியங்காவு வனத்துறையைச் சேர்ந்த ரேன்ஜ் அதிகாரி திலீப்பிற்கு உயர்மட்டத்திலிருந்து ஒரு தகவல் வந்திருக்கிறது. ஆரியங்காவு அருகேயுள்ள கழுத்துருத்தி பகுதியின் அம்பநாடு வனத்தில் வன விலங்குகள் வேட்டையாடப்பட்டு அவைகளின் இறைச்சி விற்பனைக்குச் செல்வதாக தகவல் கிடைத்திருக்கிறது.
இதனையடுத்து திலீப் தலைமையில் அம்பநாடு ஸ்டேசன் துணை ரேன்ஜர் நிஜாம், உட்கோட்டத் துறையினர் அபு தல்ஹாட் மற்றும் முரளி உள்ளிட்ட அதிகாரிகள் குறிப்பிடப்பட்ட வனப்பகுதியில் ரோந்து வந்தவர்கள், தீவிர கண்காணிப்பில் இருந்திருக்கிறார்கள். அந்த சமயம் அம்பநாடு காப்பு வனத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் சிலர் வன விலங்குகளை வேட்டையாடிக்கொண்டிருந்தது தெரியவர, அவர்களை ரவுண்ட் அப் செய்திருக்கிறார்கள். அவர்களை விசாரித்ததில் அவர்கள், பூந்தோட்டத்தைச் சேர்ந்த வினோத், வென்ச்சரைச் சேர்ந்த அந்தோனி, அம்பநாடு தோட்டத்தைச் சேர்ந்த ப்ரமோத் என்று தெரியவந்திருக்கிறது. இந்த மூவரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் தீவிரமான விசாரணை மேற்கொண்டபோதுதான் அந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அவர்கள் குறிப்பிட்ட இடத்தை சோதனையிட்டபோது, வனவிலங்குகளை வேட்டையாடி அவைகளின் இறைச்சிகளைப் பதுக்கி வைத்திருந்ததைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
அவற்றின் எடை சுமார் 2,000 கிலோவைத் தாண்டுகிறதாம். கேரள வனத்துறையினருக்குத் தெரியாமல் இந்தக் கும்பல் காட்டு எருமை, முள்ளம்பன்றி, மான் மற்றும் மிளா போன்ற மிருகங்களைத் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளை வீசி வேட்டையாடி அவற்றின் இறைச்சியை திருவனந்தபுரம், கொல்லம், புனலூர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்திருக்கிறார்கள். இதுபோன்ற மதிப்பு மிக்க, பாதுகாக்கப்பட வேண்டிய வனவிலங்குகளின் இறைச்சியை கிலோ ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை விற்றது தெரியவந்திருக்கிறது. ஏனெனில் இதுபோன்ற இறைச்சிகளுக்கு சந்தையில் கிராக்கியும் அதிக விலையும் இருப்பதால் இவர்கள் வனவிலங்குகளை வேட்டையாடிவந்திருக்கின்றனர்.
“வனவிலங்குச் சட்டப்படி இதுபோன்ற மிருகங்களை வேட்டையாடுவதும், அதன் இறைச்சிகளை விற்பதும் கடும் குற்றம். அவர்கள் பதுக்கிவைத்திருந்த இறைச்சி, துப்பாக்கி, வெடி மருந்து, வெடி பொருட்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்ததுடன் அவர்கள் 3 பேரையும் கைது செய்திருக்கிறோம்” என்கிறார் ரேன்ஜ் அதிகாரியான திலீப். இதுவரை இல்லாத அளவிற்கு கேரளப் பகுதியில் உள்ள வன விலங்குகளின் 2,000 கிலோ இறைச்சி கைப்பற்றப்பட்டது கொல்லம் மாவட்டப் பகுதியில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.