ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று விசாகப்பட்டிணம் விமான நிலையத்தில் இருந்தபோது கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஆவார். விமானத்தில் கத்திபோன்ற ஆயுதத்தால் தாக்கப்பட்டதால் ஜெகன்மோகனின் தோல்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் ஏற்பட்டுள்ள இடத்தில் இரத்தம் கசிந்தநிலையில், ஜெகன்மோகன் சிரிப்பது போன்று படம் வெளியாகியுள்ளது.
ஜெகனை தாக்கியவர் ஜானிபல்லி ஸ்ரீநிவாச ராவ்(30), தானியலபல்லி கிராமம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாகப்பட்டிணம் விமான நிலையத்திலுள்ள பியுஷன் ஹோட்டலில் ஒரு வருடமாக இவர் வேலை பார்த்து வருவதாக தெரிவிக்கின்றனர். தாக்கியவரை முதலில் விமானநிலைய பாதுகாவலர்கள் பிடித்து வைத்திருந்து பின்னர் போலிஸாரிடம் ஒப்படைத்தனர். ஜெகன்மோகன் ரெட்டிக்கு காபி கொடுப்பதுபோன்று முதலில் வந்து, பின் இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறார். இந்த செய்தியை கேள்விப்பட்ட உடனேயே, ஆந்திர ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்ஹன் மாநிலத்தின் டிஜிபி ஆர்.பி. தாக்கூரிடம் அழைபேசியில் தொடர்புகொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மற்றும் சம்பவ இடத்தில் நடந்த தகவலை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் பலர் டிஜிபி அலுவலகத்திற்கு சென்று உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.